மத்திய அரசு கடந்த 2015ஆம் ஆண்டு அறிமுகம் செய்த ஸ்மார்ட் சிட்டி (Smart City) திட்டத்திற்கு நாடு முழுவதும் 100 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டன. அதில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி நவீன வசதிகள் கொண்டதாக மாற்றுவதற்கு முடிவு செய்யப்பட்டது. கிட்டதட்ட உலகத்தரத்திற்கு என்று சொன்னால் மிகையல்ல. அதில் தமிழகத்தில் முதல்கட்டமாக 11 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டன.
இந்த பட்டியலில் கோவை மாநகரமும் அடங்கும். ஒவ்வொரு மாநகருக்கும் தலா ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனை மத்திய, மாநில அரசுகள் பகிர்ந்து கொள்ளவும் முடிவானது. 5 ஆண்டுகளுக்குள் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் திட்டப் பணிகள் இன்னும் முழுமை அடையவில்லை எனச் சொல்லப்படுகிறது.
இருப்பினும் படிப்படியாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவை மாநகராட்சி சார்பில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டுள்ள வாலாங்குளம், உக்கடம் பெரியகுளம், குறிச்சி குளம், முத்தண்ணன் குளம், செல்வசிந்தாமணி குளம் ஆகியவற்றில் அனுமதியின்றி அவுட்டோர் புகைப்படங்கள் எடுக்கக்கூடாது.
குறிப்பாக திரைப்படம், குறும்படம், சின்னத்திரை தொடர் நாடகங்கள் ஆகியவற்றுக்கு உரிய அனுமதி பெற வேண்டும். அனுமதி பெறாமல் மேற்கண்ட செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும். அதுமட்டுமின்றி சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கோவை மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் கோவை முன்னிலையில் இருக்கிறது. இங்கு ஐடி நிறுவனங்கள், பொறியியல் தொழிற்சாலைகள், துணி உற்பத்தி ஆலைகள் என வரிசை கட்டி வந்த வண்ணம் உள்ளன. சமீபத்தில் Wealth Huran India Rich List 2022 என்ற பெயரில் பட்டியல் ஒன்றை IIFL வெளியிட்டது.
அதில் இந்தியாவில் உள்ள சிறிய நகரங்களில் புதிதாக தொழில் தொடங்கவுள்ள பெரு நிறுவனங்களின் எண்ணிக்கை குறித்த தகவல் இடம்பெற்றிருந்தது. அதன்படி, சூரத்திற்கு அடுத்தபடியாக 14 தொழில் வாய்ப்புகளுடன் கோவை இரண்டாம் இடத்தில் இருக்கிறது. மொத்தம் 38,200 கோடி ரூபாய் முதலீடு செய்ய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதன்மூலம் கோவையின் வளர்ச்சி ஜெட் வேகத்தில் நகரக்கூடும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. மேலும் சென்னை, பெங்களூரு நோக்கி இடம்பெயறும் மக்களின் எண்ணிக்கை குறையும். கோவை அடுத்த ஐடி தலைநகராக, தொழில் பெருநகரமாக உருவெடுக்கும் என்று சொல்லப்படுகிறது.