சென்னை: தமிழகத்தில் மழைக்கால நோய்களுக்காக தொடர்ந்து 55 நாட்கள் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுவது இதுவே முதல் முறை. இதன்மூலம் 76.08 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னையில் சைதாப்பேட்டை சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நீர்நிலைகளின் அருகே வசிக்கும் குடும்பங்களுக்கு இலவச கொசு வலைகளை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று வழங்கினார். அப்போது, அவர் கூறியதாவது:
மழைக் காலங்களில் டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல் பாதிப்புகளை ஏற்படுத்தும் கொசுக்களிடம் இருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில் கொசு வலை வழங்கப்படுகிறது. சென்னை மாநகர் முழுவதும் நீர்நிலைகளின் அருகே வசிக்கும் மக்களுக்கு 2.60 லட்சம் கொசுவலைகள் வழங்கும் பணியை கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். வடசென்னை பகுதியில் மக்களுக்கு கொசு வலைகளை அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு வழங்கி வருகிறார்.
சைதாப்பேட்டை பகுதியில் அதிகமான குடிசைப் பகுதிகள் உள்ளதால் 23,000 குடும்பங்களுக்கு கொசு வலைகள் வழங்கப்படுகின்றன. சைதாப்பேட்டை தொகுதியில் அடையாறு ஆற்றங்கரையை ஒட்டியுள்ள கோதமேடு, திடீர் நகர், சலவையாளர் காலனி, சலவைத்துறை, சூரியா நகர், கெனால் பேங்க் சாலை ஆகிய பகுதிகளில் தற்போது கொசு வலை வழங்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் எச்1என்1 இன்ப்ளூயன்சா வைரஸ் மற்றும் பருவமழையால் ஏற்படும் நோய்களுக்காக கடந்த செப்.21-ம் தேதி முதல் தொடர்ந்து 55-வது நாளாக மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம், காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 48,187 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. 389 நடமாடும் மருத்துவ வாகனங்கள் மூலம் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் முகாம்கள் நடத்தப்பட்டு, காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு கடந்த 55 நாட்களில் 76.08 லட்சம் பேர் பயன் பெற்றுள்ளனர். பரிசோதனைகளில் 1.04லட்சம் பேருக்கு காய்ச்சல் கண்டறியப்பட்டு, சிகிச்சை வழங்கப்பட்டு குணமடைந்துள்ளனர். பருவமழைக் காலங்களில் ஏற்படும் காய்ச்சல் பாதிப்புகள் இந்த மருத்துவ முகாம்கள் மூலம் உடனடியாக கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தமிழகவரலாற்றில் தொடர்ந்து 55 நாட்கள் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுவது இதுவே முதல் முறை.
சென்னை மாநகரில் மட்டும் 3,562 முகாம்களில் 2.34 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். சென்னையில் தினமும் 90 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் ஒரே நாளில் 200 இடங்களில் 200 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டதில் 90,000 பேர் பயன் பெற்றுள்ளனர். டெங்கு, மலேரியா போன்ற நோய்களில் இருந்து மக்களை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் முதல்வர் எடுத்து வருகிறார். கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொள்ள தேவையான உபகரணங்கள், மருந்து, மாத்திரைகள் ஆகியவை கையிருப்பில் அதிகமாகவே உள்ளன. இவ்வாறு அவர் கூறினார். மாநகராட்சி மண்டல குழு தலைவர்கள் ஆர்.துரைராஜ் (அடையாறு), எம்.கிருஷ்ணமூர்த்தி (கோடம்பாக்கம்) மற்றும் கவுன்சிலர்கள் உடன் இருந்தனர்.