ஆவின் பால் விற்பனை செய்யும் முகவர்கள் மற்றும் பாலாக உரிமையாளர்களுக்கு 75 காசுகள் ஆவின் நிர்வாகத்தால் கமிஷனாக வழங்கப்படுகிறது. நீண்ட நாட்களாக கமிஷன் தொகையை உயர்த்தி தர வேண்டும் என பால் முகவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழக பால் ஏஜென்டுகள் சங்க தலைவர் பொன்னுசாமி ஆவின் பால் ஏஜெண்டுகளை வஞ்சிப்பாதை நிறுத்திக் கொள்ளாவிட்டால் ஆவின் பால் விற்பனை புறக்கணிக்க நேரிடும் என தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ஆவின் நிறுவனத்தை தனியார் நிறுவனத்திற்கு தாரைவார்க்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆவின் பாலகங்களை நடத்துபவர்களுக்கு நெய் உட்பட பல பால்பொருட்கள் முறையாக விநியோகம் செய்யப்படுவதில்லை. ஆரஞ்சு நிற பால் பாக்கெட்களின் விலை கடந்த 5ம் தேதி முதல் லிட்டருக்கு 12 ரூபாய் உயர்த்தப்பட்டது.
மேலும் மாதாந்திர பால் அட்டையில் அவர்களுக்கு ஆரஞ்சு நிற பால் பாக்கெட் லிட்டர் 46 ரூபாய்க்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கோவையில் உள்ள தனியார் பால் நிறுவனங்கள் கொழுப்பு நிறைந்த ஒரு லிட்டர் பால் பாக்கெட் விலை 48 ரூபாய்க்கு விற்பனை செய்கிறது. இதன் காரணமாக பொதுமக்கள் தனியார் நிறுவனத்தை நாடும் நிலை ஏற்பட்டுள்ளது. விலை உயர்வு காரணத்தால் ஆவின் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை இழந்து வருகிறது.
ஆவின் நிர்வாகம் பாலகம் நடத்தும் ஏஜென்ட்களை அழிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பால் விற்பனை விலை உயர்த்தினாலும் பாலக ஏஜெண்டுகளுக்கு லிட்டருக்கு ரூ.2 மட்டுமே கமிஷனாக வழங்கப்படுகிறது. ஆவின் நிறுவனத்தின் முதுகெலும்பாக இருக்கும் ஏஜெண்டுகளை வஞ்சிக்கும் செயலை ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே ஆவின் பால் மற்றும் பால் பொருட்களில் விற்பனையை தமிழக முழுதும் பொருட்களை தொடர்பாக கூடிய விரைவில் முடிவு எடுக்கப்படும்” என தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.