உதய்பூர்: ராஜஸ்தானில் 185 கிலோ ஜெலட் டின் குச்சிகள் அடைக்கப்பட்ட ஏழு சாக்கு மூட்டைகள் சோம் ஆற்றில் கண்டெடுக்கப்பட்டன.
ராஜஸ்தானின் துங்கர்பூர் மாவட்டத்தில் உள்ள சோம் ஆற்றில், ஒரு பாலத்துக்கு அடியில் ஆழமற்ற தண்ணீரில் 7 சாக்கு மூட்டைகள் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதன் பேரில் போலீஸார் அங்கு சென்று அந்த மூட்டைகளை கைப்பற்றி போலீஸார் ஆய்வு செய்தனர். அதில் சுரங்கங்களில் பாறைகளை வெடிவைத்து தகர்க்க பயன்படுத்தும் ஜெலட்டின் குச்சிகள் 185 கிலோ இருப்பது தெரியவந்தது.
ராஜஸ்தானின் உதய்ப்பூரில் கடந்த சனிக்கிழமை இரவு ரயில் பாதையில் குண்டுவெடிப்பு ஏற்பட்ட இடத்திலிருந்து 70 கி.மீ. தொலைவில் இந்த இடம் உள்ளது. எனவே இந்த 2 சம்பவங்களுக்கும் தொடர்பு இருப்பது போல் தோன்றினாலும் ரயில் பாதையில் காணப்பட்ட வெடிபொருளுக்கும் இதற்கும் வேறுபாடு இருப்பதாக போலீஸார் கூறினர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “யாரோ ஒருவர் சுரங்கத்தில் பயன்படுத்தப்பட்ட பழைய ஜெலட்டின் கையிருப்பை அங்கு கொட்டியதாகத் தெரிகிறது. என்றாலும் எல்லா கோணங்களிலும் இந்த விஷயத்தை நாங்கள் விசாரித்து வருகிறோம்” என்றார்.