ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த தன்னுடைய மகளை, திருமணம் செய்து கொள்வதாகக் கூறி கொல்கத்தாவுக்கு கடத்திச் சென்ற நபர், அவரை தனி அறையில் அடைத்து கொடுமைப்படுத்தி வருவதாகவும், அவரை மீட்டுத் தரக் கோரியும் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகனிடம் கடந்த மாதம் 20-ம் தேதி கண்ணீர் மல்க புகாரளித்திருந்தார் ஜோதி என்பவர்.
இந்த நிலையில், அந்தப் பெண்ணை மீட்டுவர 4 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டிருப்பதாகவும் இந்த தனிப்படை இன்று சென்னை வழியாக கொல்கத்தா கிளம்பிச் செல்லவிருப்பதாக ஏ.எஸ்.பி கௌதம் கோயல் தெரிவித்திருக்கிறார். பெருந்துறை, பாலக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (46). இவர் தன் மனைவி ஜோதியுடன் (42) கடந்த மாதம் 20-ம் தேதி ஈரோடு மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் பரபரப்பான புகார் மனுவை அளித்திருந்தார்.
இது குறித்து நம்மிடம் பேசிய ஜோதி, “என் மகள் சுமித்ரா (22), கடந்த 2017-ம் ஆண்டு பெருந்துறையிலுள்ள தனியார் கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து வந்தார். அதே நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த மேற்கு வங்க மாநிலம், பர்த்னமானை அடுத்த கலான்பூர் அம்தோப் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்தாஸ் மகன் சுப்ரத தாஸ் என்பவர் என் மகள் சுமித்ராவை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தைக் கூறி கொல்கத்தாவுக்கு கடத்திச் சென்றுவிட்டார். எங்கள் மகள் காணாமல் போனதாகக் கருதி பல இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை.
பின்னர் ஒரு வாரம் கழித்து என் மகள் சுமித்ரா போனில் தொடர்பு கொண்டு, தான் கொல்கத்தாவில் சுப்ரததாஸை திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வருவதாகவும், `என்னை யாரும் தேட வேண்டாம்’ என்றும் கூறிவிட்டு போனை வைத்துவிட்டார்.
அதன் பிறகு எங்களைத் தொடர்பு கொண்ட அந்த செல்போன் எண்ணை எப்போது தொடர்பு கொண்டாலும் ஸ்விட்ச் ஆஃப் என்றே வந்தது. இதனால் எங்கள் மகள் கண்காணாத தேசத்தில் சரியாகத்தான் வாழ்ந்து வருகிறாள் என்ற நினைத்து கொண்டிருந்தோம். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு என் மகள் போன் செய்து தனக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாகக் கூறினாள். அதனைத் தொடர்ந்து 15 நாள்களுக்கு ஒருமுறை நாங்களும், எங்கள் மகள் சுமித்ராவுடன் போனில் பேசிக் கொண்டுதான் இருந்தோம். அவள் அங்கு நல்லபடியாக வாழ்ந்து வருவதாக எண்ணியிருந்த நிலையில், கடந்த 3 மாதங்களாக என் மகளை, சுப்ரத தாஸ் மது குடித்திவிட்டு வந்து அடித்து துன்புறுத்துவதாகவும், சூடு வைத்து சித்ரவதை செய்வதாகவும், வீட்டில் அடைத்து கதவை பூட்டி வைத்து துன்புறுத்துவதாகவும் என் மகள் கூறி வந்தார். சாப்பிடும் சாப்பாட்டில் எச்சில் துப்பி, சிறுநீர் கழித்து கொடுப்பதாகவும் என் மகள் கதறி அழுதாள்.
இப்போது, அதையும் கடந்து, `அவரின் நண்பர்களையெல்லாம் வீட்டுக்கு அழைத்துவந்து மது அருந்துகிறார். அப்போது, அவர் நண்பர்களுக்கும் மதுவை ஊற்றி கொடுக்குமாறு கூறி அடிப்பதுடன், நண்பர்களுடன் நீ தனிமையில் இருக்க வேண்டுமெனக் கூறி அடித்து சித்ரவதை செய்கிறார்’ என மகள் சுமித்ரா கதறி அழுகிறாள்.
தொடர்ந்து பல்வேறு சித்ரவதைகளுக்கும், கொடுமைகளுக்கும் ஆளாகி வந்த எங்கள் மகள் சுப்ரத தாஸிடம், `என்னை விட்டுவிடு நான் போகிறேன்’ என்று கூறினால், `உன்னை விட்டால் நீ போலீஸுக்கு போய் என்னை காட்டிக் கொடுத்து விடுவாய்’ என்று கூறி வெளியே விடமுடியாது என்று வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்து வருகிறான். `ஒருவேளை என்னை மீறி நீ வீட்டைவிட்டு போனால், உன்னை தேடிக் கண்டுபிடித்து உன்னையும், உன் குழந்தையையும் எரித்துக் கொன்று விடுவேன்’ என்றுக் கூறி மிரட்டி வருகிறான்.
இந்த நிலையில் என் மகள் பக்கத்துவீட்டு பெண்ணிடமிருந்து செல்போனை வாங்கி, அவள் கணவனுக்குத் தெரியாமல் வாட்ஸ்அப் வீடியோ காலில் கதறி அழுதாள். எனவே கொல்கத்தாவில் கடும் சித்ரவதைக்கு ஆளாகியிருக்கும் எங்கள் மகளை போலீஸார் மீட்டுத் தர வேண்டும்” என்றார்.
இளம்பெண் சுமித்ரா வாட்ஸ்அப் வீடியோ காலில், “என்னுடைய உயிர் எந்த நேரத்திலும் போகக் கூடும். என் குழந்தையைக் கொன்று விடுவதாகவும், என்னை அரை நிர்வாணப்படுத்தி வெளியில் நிற்க வைப்பதுமென பல்வேறு கொடுமைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். என்னை எப்படியாவது மீட்டு அழைத்துச் சென்று விடுங்கள்” என்று கூறி கதறி அழுகிறார்.
இந்த வாட்ஸ்அப் வீடியோ கால் உள்ளிட்ட ஆதாரங்களையும் போலீஸாரிடம் சுந்தர்ராஜ், ஜோதி ஆகியோர் சமர்ப்பித்திருந்தனர்.
இதையடுத்து கொல்கத்தாவில் சிறைபட்டிருக்கும் சுமித்ராவை மீட்டு வருவதற்காக பெருந்துறை இன்ஸ்பெக்டர் மர்ஷுதா பேகம் தலைமையில், எஸ்.ஐ சந்தானம், தலைமைக் காவலர்கள் வசந்தி, பிரபாகர் ஆகிய 4 பேர் கொண்ட தனிப்படைக்கு மாவட்ட எஸ்.பி சசிமோகன் அனுமதியளித்திருக்கிறார். இதையடுத்து இந்த தனிப்படை போலீஸார் இன்று காலை ஈரோட்டிலிருந்து சென்னை வழியாக கொல்கத்தாவுக்குச் செல்லவிருப்பதாக ஏ.எஸ்.பி.கௌதம் கோயல் தெரிவித்திருக்கிறார்.