மானாமதுரை: அதிமுக ஆட்சியில் ரூ.1.29 கோடியில் அமைத்த சாலை ஓராண்டுக்குள் குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்றதாக மாறியுள்ளது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் புகார் செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மிளகனூர் ஊராட்சியில் இருந்து, கொம்புக்காரனேந்தல் வரை சாலை அமைக்க கடந்த அதிமுக ஆட்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 29 லட்சத்து 56 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டது.
இதன்படி மிளகனூர் கட்டனூரில் இருந்து கொம்புக்காரனேந்தல் வரை 2019-20ம் ஆண்டில் சாலை அமைக்க டெண்டர் விடப்பட்டு பணிகளை அதிமுகவை சேர்ந்த ஒப்பந்ததாரர் மேற்கொண்டார். பணிகள் நடந்தபோதே தரமற்று இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து அப்போது புகார் செய்தபோது எந்தவித நடவடிக்கையும் இல்லை. தற்போது அந்த சாலை பெயர்ந்து குண்டும் குழியுமாக மாறியுள்ளது. இதனால் கிராம மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
இதுகுறித்து தமிழக அரசு ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர், மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் ஆகியோருக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் ஆண்டி புகார் செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘கடந்த அதிமுக ஆட்சியின்போது மிளகனூர் – கட்டனூர் சாலையில் இருந்து கொம்புக்காரனேந்தல் வரை ரூ.1 கோடியே 29 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பில் சாலை போடப்பட்டது. இந்த சாலை தரம் இல்லாமல் போடப்பட்டுள்ளதால் ஓராண்டுக்குள்ளாக குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்றதாக மாறியுள்ளது. ஒரு சாலை அமைத்தால் 5 ஆண்டுகளுக்கு பராமரிக்க தேவையில்லை. ஆனால் தற்போது இந்த சாலையை தேடிப்பார்த்தாலும் கண்டுபிடிக்க முடியாத நிலையில் உள்ளது. ஊழல் முறைகேடு தொடர்பாக சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக பொறியியல் பிரிவில் இரண்டு முறை லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை செய்தனர்.
அப்போது கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டது. பொறியியல் பிரிவில் பலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. பொறியியல் பிரிவு உயர் அதிகாரியை மாறுதல் செய்த பின்ும், அப்போதைய அதிமுக அமைச்சர்களின் தயவால் அவர் செல்லவில்லை. இது தவிர மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் வாயிலாக ரூ.150 கோடியில் 24 சாலைகள் டெண்டர் விடப்பட்டது. ஆனால் பணிகள் தொடங்கப்பட்டதா என தெரியவில்லை. இவ்வாறு கடந்த அதிமுக ஆட்சியில் மாவட்டத்தில் நடந்த அனைத்து சாலைகளையும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க கோரி மனு அனுப்பி உள்ளேன்’’ என்றார்.