ஆம்புலன்ஸுக்கு வழிவிடாமல் அராஜகத்தில் ஈடுபட்ட அதிமுகவினர்: விருத்தாசலத்தில் பரபரப்பு

விருத்தாச்சலம் புறவழிச்சாலையில் உள்ள உயர் மின் விளக்குகள் கடந்த சில தினங்களாகவே எரியாமல் இருந்த நிலையில் ஏன் விளக்குகள் எரியவில்லை என அதிமுகவினர் அதிகாரிகளை மிரட்டியும், திமுகவினரை அவதூறாக பேசியும், 108 ஆம்புலன்ஸ்க்கு வழி விடாமல் காரை ரோட்டில் நிறுத்தி சாலை மறியல் செய்து அராஜகத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் பொன்னேரி புறவழிச் சாலையில் அமைந்துள்ள, உயர் மின்விளக்குகள், கடந்த ஒரு வார காலமாக எரியாமல் இருக்க, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சரி செய்யாமல் கிடப்பில் போடப்பட்டதால்,  நேற்று முன்தினம்,  விருத்தாச்சலம் வழியாக தமிழக முதல்வர் சென்னை சென்ற போது, உயர் மின்விளக்குகள் எரியாமல் இருந்தது கடும் சர்ச்சையானது.

அதன் பின்னர் மின்விளக்குகளை பராமரிப்பில் ஈடுபடும் ஒப்பந்ததாரர்,  ஊழியர்களைக் கொண்டு சரி செய்தனர். இந்நிலையில் கடலூர்  மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகள் பற்றி ஆய்வு மேற்கொண்ட,  தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, விருத்தாசலம் வழியாக சேலம் செல்வதை அறிந்த  22 -வது வார்டு திமுக கவுன்சிலரான அருள்மணி என்பவரின் கணவர் செந்தில், மின்விளக்குகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்களிடம், எங்கள் முதல்வர் வரும்போது இல்லாத அக்கறை,  தற்போது ஏன் உள்ளது என கேட்டதாக கூறப்படுகிறது. 

இதனை அறிந்த அதிமுகவினர், நூற்றுக்கும் மேற்பட்டோர் கூட்டாக வந்து மின்வாரியத்துறை அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுடன், மின் விளக்குகளை எரிய வைக்க வேண்டும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த அதிமுக வடக்கு ஒன்றிய பொருளாளர் மற்றும் பவழங்குடி ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் 

22 -வது வார்டு திமுக கவுன்சிலரின் கணவர் செந்தில் அண்ணன் மகனை நெட்டி தள்ளி தாக்க முயற்சித்தார். அப்போது அதிமுகவினருக்கும் அப்பகுதி பொதுமக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்பு அதிமுகவினர் பொன்னேரி புறவழிச் சாலையில், எடப்பாடி பழனிச்சாமியின் வருகைக்காக  காத்திருந்த பொன்னேரி ரவுண்டானாவில் உள்ள நான்கு முனை சந்திப்பில் அமர்ந்து, திமுக அரசை கண்டித்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அறிந்த காவல்துறையினர் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

மேலும் மின்விளக்கினை மின்சாரத்துறை ஊழியர்கள் உடனடியாக சரி செய்து எரிய வைத்தனர். சிறிது நேரத்தில் விருத்தாசலம் வழியாக செல்லக்கூடிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பொன்னேரி தேசிய நெடுஞ்சாலை ரவுண்டானாவில் அக்கட்சித் தொண்டர்கள் வரவேற்பு கொடுத்தனர்.

 அப்பொழுது அவ்வழியாக 108 ஆம்புலன்ஸ் வந்து கொண்டிருந்தது. பொன்னேரி தேசிய நெடுஞ்சாலை ரவுண்டானாவில் அதிமுக கொடியுடன் கார் ஒன்று நடுரோட்டில் நிறுத்தி வைக்கப்பட்டதால் அந்த வழியாக சிதம்பரம் நோக்கி சென்ற 108 ஆம்புலன்ஸ் நீண்ட நேரமாக ஆம்புலன்ஸ் ஒலி எழுப்பிய நிலையில் யாரும் வரவில்லை.

காரின் உரிமையாளரும் வராததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர் அந்த வாகனத்தை இயக்கி ஓரமாக நிறுத்தி வைத்தார். பின்பு 108 ஆம்புலன்ஸ் சிதம்பரம் அரசு மருத்துவமனை நோக்கி சென்றது. இது போன்று அதிமுகவினர் 108 ஆம்புலன்ஸ்க்கு வழிவிடாமல் காரை நடு ரோட்டில் நிறுத்தி வைத்து அராஜகத்தில் ஈடுபட்டும், திமுக கவுன்சிலரை தாக்க முயற்சித்தும், சாலையில் அமர்ந்து சாலை மறியல் செய்தும் அமைதிக்கு பங்கம் விளைவித்த செயல்கள் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது என்றும், அதிமுகவினர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்களும், அவ்வழியே செல்லும் பொதுமக்களும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.