புதுடெல்லி: ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் அஜய் மக்கான் நேற்று பதவியில் இருந்து விலகினார்.
காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் விரும்பினார். ஆனால் ஒருவருக்கு ஒரு பதவி என்று கட்சி மேலிடம் கூறியது. மேலும் முதல்வர் பதவியை கெலாட் ராஜினாமா செய்தால், சச்சின் பைலட்டை முதல்வராக்க கட்சி மேலிடம் முடிவு செய்தது.
அதற்கு கெலாட் ஆதரவு எம்எல்ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த சூழ்நிலையில் ராஜஸ்தான் காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் கூட்டத்தை மாநில பொறுப்பாளர் அஜய் மக்கான் கடந்த செப்டம்பர் மாதம் கூட்டினார். அந்த கூட்டத்தை கெலாட் ஆதரவு எம்எல்ஏ.,க்கள் புறக்கணித்தனர். மேலும் சபாநாயகரை சந்தித்து தங்கள் ராஜினாமா கடிதத்தை கொடுத்தனர். அசோக் கெலாட்டை முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய தூண்டிய அஜக்மக்கானை ராஜஸ்தான் எம்எல்ஏக்கள் விமர்சித்தனர். கடைசி நேரத்தில், கட்சி தலைவர் தேர்தலில் போட்டியிடாமல் முதல்வர் பதவியில் நீடிப்பதாக கெலாட் கூறிவிட்டார்.
மேலிட உத்தரவை மீறி தனியாக எம்எல்ஏ.,க்கள் கூட்டத்தை கூட்டிய 3 எம்எல்ஏ.,க்களுக்கு விளக்கம் அளிக்கக் கோரி காங்கிரஸ் மேலிடம் நோட்டீஸ் அனுப்பியது. அசோக் கெலாட் ஆதரவு எம்எல்ஏ.,க்கள் மீது நடவடிக்கை எடுத்து அரசியல் நிலையற்ற தன்மைக்கு முடிவு கட்ட வேண்டும் என சச்சின் பைலட் சமீபத்தில் கூறியிருந்தார். ஆனால், இதுவரை அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் அதிருப்தியடைந்த அஜய் மக்கான், ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் பதவியிலிருந்து நேற்று விலகினார்.