இந்தியாவில் அதிரடி அரசியல்வாதிகளில் ஒருவராக இருப்பவர் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. காங்கிரஸ் கட்சி, பா.ஜ.க என எந்தக் கட்சி மத்தியில் ஆட்சியில் இருந்தாலும், டெல்லிக்கு எதிராக ஆவேசமாக குரல் எழுப்புபவராகவும் அவர் இருந்துவருகிறார். 2013-ம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆட்சி நடைபெற்றது. பிரதமராக மன்மோகன் சிங் இருந்தார். அப்போது, மேற்கு வங்கத்துக்குத் தேவையான நிதியை மத்திய அரசு வழங்கவில்லை என்று மிகவும் ஆவேசமடைந்தார் மம்தா பானர்ஜி.
மேற்கு வங்கத்தில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, “மேற்கு வங்கத்துக்குத் தேவையான நிதியை ஒதுக்கீடு செய்யுமாறு பிரதமர் மன்மோகன் சிங்கை பத்து முறை சந்தித்து முறையிட்டேன். இதற்கு மேல் நான் என்ன செய்ய முடியும்? அவரை என்னால் அடிக்கவா முடியும்? அப்படி செய்தால் மக்கள் என்னை ரௌடி என்றுதான் அழைப்பார்கள்” என்று ஆவேசப்பட்டார். நாட்டின் பிரதமரை நோக்கி இப்படி எந்த முதல்வரும் பேசியது கிடையாது.
அதேபோல, நரேந்திர மோடி பிரதமரான பிறகு, அவரை பல சந்தர்ப்பங்களில் மிக மோசமாக விமர்சித்திருக்கிறார் மம்தா பானர்ஜி. கொல்கத்தாவுக்கு வந்த மோடி, விமானத்திலிருந்து இறங்கியபோது, முகத்தைத் திருப்பிவைத்துக்கொண்டு செய்தித்தாள் படித்துக்கொண்டிருந்தவர்தான் மம்தா பானர்ஜி. அதேபோல, மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி பங்கேற்ற ஆய்வுக்கூட்டத்தில் கலந்துகொள்ளாமல், வேறொரு நிகழ்ச்சிக்குப் போய்விட்டார் மம்தா பானர்ஜி. அதைவிட, பிரதமர் பங்கேற்ற அந்த நிகழ்ச்சியில் மேற்கு வங்க மாநிலத்தின் தலைமைச்செயலாளர்கூட பங்கேற்கவில்லை. அந்தச் சம்பவம், மத்திய அரசுக்கும் மேற்கு வங்க அரசுக்கும் இடையே நிர்வாகரீதியில் மிகப்பெரிய மோதலாகவும் மாறியது.
அந்தளவுக்கு மத்திய அரசுடன் மோதிவந்த மம்தா பானர்ஜி, சமீபகாலமாக கொஞ்சம் அமைதியைக் கடைப்பிடித்து வருகிறார். மம்தாவின் நெருங்கிய உறவினருக்கு எதிராக மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகள் கிடுக்கிப்பிடி போட்டதுதான், அவரின் அமைதிக்குக் காரணம் என்றெல்லாம் சொல்லப்பட்டது. சமீபத்தில் மேற்கு வங்க சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் மம்தா, ‘சி.பி.ஐ., அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கைகள் மூலமாக ஒவ்வொரு நாளும் எதிர்க்கட்சித் தலைவர்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள்.
இப்படித்தான் புலனாய்வு அமைப்புகள் செயல்பட வேண்டுமா? இதன் பின்னணியில் பிரதமர் மோடி இருப்பதாக நாங்கள் கருதவில்லை. ஆனால், பா.ஜ.க-வின் மற்ற தலைவர்கள் தங்களின் சுயநலன்களுக்காக சி.பி.ஐ, அமலாக்கத்துறையை தவறாகப் பயன்படுத்துகிறார்கள்” என்று கூறினார். அதற்கு, ‘பிரதமரை தாஜா செய்ய திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் முயல்கிறார்’ என்று பா.ஜ.க-வைச் சேர்ந்தவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சுவேந்து அதிகாரி சாடினார்.
இந்த நிலையில்தான், மத்திய அரசுக்கு எதிராக அதிரடி அரசியலை மீண்டும் மம்தா ஆரம்பித்திருக்கிறார். மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி பாக்கி உள்ளிட்ட நிதிகளை மத்திய அரசு உரிய நேரத்தில் வழங்குவதில்லை என்கிற புகாரை தமிழ்நாடு உட்பட பல மாநிலங்கள் தொடர்ந்து முன்வைத்துவருகின்றன. இந்த நிலையில்தான், ‘மேற்கு வங்கத்துக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை மத்திய அரசு வழங்காவிட்டால், ஜி.எஸ்.டி செலுத்துவதை நிறுத்த வேண்டியிருக்கும்’ என்று மம்தா பானர்ஜி எச்சரித்திருக்கிறார்.
மேற்கு வங்க மாநிலத்தில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் ஜார்கிராம் மாவட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பேரணி நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய மம்தா பானர்ஜி, “மாநிலத்தின் நிலுவைத் தொகையை மத்திய அரசு செலுத்தவில்லையென்றால், ஜி.எஸ்.டி செலுத்துவதை நிறுத்த வேண்டியிருக்கும். மத்திய அரசு மாநிலங்களின் நிலுவைத்தொகையை செலுத்த வேண்டும் அல்லது ஆட்சியிலிருந்து விலக வேண்டும்.
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்துக்கு மத்திய அரசு தர வேண்டிய நிதி இன்னும் வழங்கப்படவில்லை. இதற்காக, களத்தில் இறங்கி போராடுமாறு பழங்குடியினருக்கு அவர் அழைப்பு விடுத்தார். நம்முடைய நிதியைப் பெற மத்திய அரசிடம் நாம் மன்றாட வேண்டுமா? நிலுவைத் தொகையை வழங்காவிட்டால் பா.ஜ.க அரசு ஆட்சியிலிருந்து விலக வேண்டும்” என்றார் ஆவேசத்துடன்.
மம்தா பானர்ஜி ஒரு மிரட்டலான அரசியல்வாதிதான். அதே நேரத்தில், மத்திய ஆட்சியாளர்களும் அவருக்கு சளைத்தவர்கள் அல்ல. குறிப்பாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் மம்தா பானர்ஜி போலவே அதிரடியாகப் பேசக்கூடியவர். எனவே, மம்தாவின் மிரட்டலுக்கு பயந்து மேற்கு வங்கத்துக்கு கொடுக்க வேண்டிய நிதியை உடனே கொடுத்துவிடுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.