ஜி-20 மாநாட்டின் தலைமை பொறுப்பை இந்தோனேசியா இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது.
இந்தியா, அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட 19 நாடுகளும், ஐரோப்பிய கூட்டமைப்பும் ஒன்றிணைந்துள்ள ஜி-20 இரண்டு நாள் உச்சி மாநாடு இந்தோனேசியாவில் பாலி தீவில் கடந்த 15 ஆம் திகதி ஆரம்பமானது..
இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன், சீன ஜனாதிபதி ஜின்பிங், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரான் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட உலக தலைவர்கள் பங்கேற்ற இந்த மாநாடு நேற்று (16) நிறைவு பெற்றது.
இதன்போது ‘ஜி20’ தலைமை பொறுப்பை இந்தியாவிடம் இந்தோனேசியா ஒப்படைப்பதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ‘ஜி20’ அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தோனேசியா ஜனாதிபதி ஜோகோ விடோடோ, பிரதமர் மோடியிடம் முறைபடி ஒப்படைத்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த பிரதமர் மோடி, ‘ஜி20′ அமைப்பின் தலைமை பொறுப்பை ஏற்பது, ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமைக்குரிய விஷயம் ஆகும்’ என குறிப்பிட்டார்.
இதற்கமைய அடுத்த ஆண்டு (2023) டிசம்பர் 1 ஆம் திகதி ஜி-20 மாநாட்டை இந்தியா நடத்தவுள்ளது.