தமிழ்நாட்டில் அரசு வேலைக்காக காத்திருப்போர் எண்ணிக்கை 67 லட்சமாக உயர்வு…

சென்னை: தமிழ்நாட்டில் அரசு வேலை கிடைக்கும் என எதிர்பார்ப்புடன், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போர் எண்ணிக்கை 67 லட்சத்தை தாண்டி உயர்ந்து உள்ளது. இந்த தகவலை அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தெரிவித்து உள்ளது.

இளைய சமுதாயத்தினர் மட்டுமின்றி பெற்றோரிடமும் அரசு வேலை என்பது ஒரு கனவாகவே உள்ளது. ஆனால், இந்த கனவு பெரும்பாலோருக்கு நிறைவேறுவது இல்லை. இருந்தாலும், உயர்படிப்பு முடிந்ததும், தங்களது கல்வி விவரங்களை அரசு வேலைவாய்ப்பு துறையில் பதிவு செய்து, அரசு பணிக்காக லட்சக்கணக்கானோர் காத்திருக்கின்றனர். ஆனால், இதில் சில ஆயிரம் பேருக்கு மட்டுமே வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன. அதுவும் கடந்த இரு ஆண்டுகளாக தமிழகஅரசு ஓய்வு பெறும் வயது 58ல் இருந்து 60ஆக உயர்த்தி விட்டதால், பல லட்சம் வேலையில்லாதவர்களின் ஆசை கானல் நீராக மாறிபோயுள்ளது.

இந்த நிலையில், மாநிலம் முழுவதும், அரசு வேலைவாய்ப்புக்காக 67.23 லட்சம் பேர் பதிவு செய்துள்ளதாக அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தெரிவித்து உள்ளது.  கடந்த அக்டோபர் மாதம் 31-ந் தேதி வரையிலான பதிவு தொடர்பான தரவுகளை வேலை வாய்ப்பகம் வெளியிட்டுள்ளது.  அதன்படி, அரசு வேலைவாய்ப்புக் காக 67 லட்சத்து 23 ஆயிரத்து 682 பேர் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 31 லட்சத்து 40 ஆயிரத்து 532 பேர் ஆண்கள், 35 லட்சத்து 82 ஆயிரத்து 882 பேர் பெண்கள், 268 பேர் மூன்றாம் பாலினத்தவர். இவர்களில், 1லட்சத்து 42 ஆயிரத்து 967 பேர் மாற்றுத்திறனாளிகள் என்று அந்த தரவில் கூறப்பட்டுள்ளது

அரசு பணிக்காக காத்திருப்போர் பட்டியலில், 60 வயதுக்கு மேற்பட்டோர் 5,602 பேரும், 46 வயது முதல் 60 வயது உடையவர்கள் 2.30 லட்சம் பேரும், 31 முதல் 45 வயதுடையவர்கள் 18.30 லட்சம்பேரும், 19 முதல் 30 வயதுள்ளவர்கள் 28.09 லட்சம்  பேரும்,  18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் 18.48 லட்சம் பேரும்  காத்திருக்கின்றனர் என பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.