திருத்தணி அருகே பிரசவ வலியால் 108 ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு சென்றபோது வழியிலேயே பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு தாலுகா, புண்ணியம் பஜனை கோயில் தெருவைச் சேர்ந்தவர்கள் சுந்தர்ராஜ் – திவ்யா தம்பதியர். இவர்களுக்கு ஏற்கெனவே இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த திவ்யா, திருத்தணி அடுத்த மத்தூர் ஏ.எம்.பேட்டை கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டில் இருந்துள்ளார்.
இந்நிலையில் திடீரென திவ்யாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது ஆறுமுகசாமி கோவில் அருகே ஆம்புலன்ஸ் வந்தபோது திவ்யாவுக்கு பிரசவ வலி அதிகமானது.
இதையடுத்து ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் ஏழுமலை திவ்யாவுக்கு பிரசவம் பார்த்துள்ளார். அதில், திவ்யாவுக்கு ஆம்புலன்ஸ்லேயே ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதைத் தொடர்ந்து தாயும் சேயும் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு இருவரையும் பரிசோதனை செய்த மருத்துவர்கள் இருவரும் நலமாக இருப்பதாக தெரிவித்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM