பாலிவுட் நட்சத்திரங்களின் வாரிசுகள் பெரும்பாலும் திரைப்படத்துறையே தேர்ந்தெடுக்கின்றனர். நடிகை ஸ்ரீதேவி, சைஃப் அலிகான், அனில் கபூர் போன்றவர்களின் வாரிசுகள் தற்போது நடித்து வருகின்றனர். பாலிவுட் நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான், அமெரிக்க திரைப்படக்கல்லூரியில் படித்துவிட்டு வந்துள்ளார். தற்போது வெப் சீரிஸ் ஒன்றைத் தயாரிப்பதற்கான வேலையில் ஈடுபட்டுள்ளார். ஆர்யன் கானுக்கு உதவ அமெரிக்காவிலிருந்து திரைப்பட இயக்குநரை வரவழைத்து ஷாருக் கான் பயிற்சி கொடுத்து வருகிறார்.
இதனிடையே ஷாருக் கான் குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமான கரண் ஜோஹர் சமீபத்தில் ஆர்யன் கானைத் தனது படத்தில் நடிகராக அறிமுகப்படுத்துவதாகத் தெரிவித்திருந்தார்.
ஆனால் ஆர்யன் கான் அதனை நிராகரித்துவிட்டார். விரைவில் ஆர்யன் கான் தனது முடிவை மாற்றிக்கொண்டு நடிக்க வருவார் என்று கரண் ஜோஹர் எதிர்பார்த்தார். ஆனால் அவர் தனது முடிவில் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது. கரண் ஜோஹர் பாலிவுட்டில் ஆலியா பட் உட்பட ஏராளமான வாரிசு நடிகர்களை அறிமுகப்படுத்தி இருக்கிறார். இதனாலேயே அவரைக் கடுமையாக விமர்சிப்பவர்களும் உண்டு.
இதே போன்று இயக்குநர் ஜோயா அக்தரும் தனது படத்தில் ஆர்யன் கானை அறிமுகப்படுத்துவதாகத் தெரிவித்தார். ஆனால் தனக்கு கேமரா முன்பு நிற்க விரும்பவில்லை என்று ஆர்யன் தெரிவித்துவிட்டார். அதேசமயம் தான் படத் தயாரிப்பில் ஈடுபடப்போவதாக வெளிப்படையாகவே தெரிவித்துவிட்டார். தற்போது தயாரிப்பு மட்டுமல்லாது கதை எழுதுவதிலும் கவனம் செலுத்தி வருகிறார். விரைவில் அவர் எழுத்தாளராக அறிமுகமாகலாம் என்கிறார்கள்.
அதே சமயம், ஷாருக் கானின் மகள் சுஹானா கான் பாலிவுட்டில் நடிகையாக அறிமுகமாக இருக்கிறார். சுஹானா கானுடன் நடிகை ஸ்ரீதேவி மகள் குஷி கபூர், அமிதாப் பச்சன் பேத்தி அகஸ்தியா ஆகியோர் நடிப்பில் ‘தி ஆர்ச்சீஸ்’ என்ற படம் தயாராகி வருகிறது. ஜோயா அக்தர் இயக்கும் இப்படம் நேரடியாக ஓ.டி.டி-யில் வெளியாக இருக்கிறது.
ஷாருக் கான் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘பதான்’ படம் வரும் ஜனவரி மாதம் திரைக்கு வருகிறது. அதோடு அட்லியின் ‘ஜவான்’ படத்திலும் அவர் நடித்து வருகிறார்.