செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், சத்திய சிவாவின் இயக்கத்தில், சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘நான் மிருகமாய் மாற’ திரைப்படம் வரும் நவம்பர் 18ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்காக பட குழுவினர் பத்திரிக்கையாளர்களை சந்தித்து கலந்துரையாடினர். படத்திலிருந்து பிரத்யேகமாக, ஒரே டேக்கில் எடுக்கப்பட்ட சண்டைக் காட்சி திரையிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து படக் குழுவினர் உரையாடத் தொடங்கினர்.
இவ்விழாவினில் சசிகுமார் பேசுகையில், தான் படம் நடித்து ஒரு வருடம் ஆகிவிட்டது என்பதனை தெரிவித்தார். காமன் மேன் என்று இந்த திரைப்படத்திற்கு முதலில் பெயர் வைக்கப்பட்டது. பின்னர் அந்த தலைப்பு மாற்றப்பட்டு நான் மிருகமாய் மாற என்று பெயர் சூட்டப்பட்டது. இந்தப் படத்தில் வன்முறை காட்சிகள் அதிகமாக இருக்கும். எனினும் குழந்தை, மனைவி என்று கதையில் ஒரு சராசரி மனிதனின் உணர்ச்சிகள் சரியாக பயன்படுத்தப்பட்டிருக்கும்.
ஜிப்ரானின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம் அளித்துள்ளது என்று தான் கூற வேண்டும். பாடலே இல்லாத திரைப்படத்தில் முதன்முறையாக பணியாற்றியுள்ளேன். படத்தில் நடனம் இல்லை என்பது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. எப்பொழுதும் ஒரு கிராமத்து கதாநாயகனாக வயலில் வேட்டியுடன் சுற்றித்திரிந்த எனக்கு ஒலிப் பொறியாளர் கதாபாத்திரம் மிகவும் வித்தியாசமாக இருந்தது. இந்த கதாபாத்திரத்திற்காக ஒலிப்பொறியாளர்கள் லட்சுமி நாராயணன் மற்றும் உதயகுமார் அவர்களை கூர்ந்து கவனித்தேன். படத்தில் அனைத்துமே புதியதாக இருக்கும்.
இதற்காக அனைவரும் கடினமாக உழைத்து உள்ளோம். படக்குழுவினர் அனைவரும் தங்களது முக்கியத்துவத்தை உணர்ந்து சிறப்பாக பங்களித்து பணியாற்றியுள்ளனர்.”படம் இப்படி இருக்கு, அப்படி இருக்கு என்று சொல்லல, நீங்க பார்த்துட்டு சொல்லுங்க, படம் எப்படி இருக்குன்னு” என்று தன் பாணியில் உரையை முடித்தார். அடுத்த வாரம் காரி என்ற படம் வெளியாக உள்ளது என்பதனையும் சசிக்குமார் தெரிவித்தார்.