சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனீஷ்வர்நாத் பண்டாரி கடந்த ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி பணி ஓய்வு பெற்றார்.
இதையடுத்து, உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி எம். துரைசாமி பொறுப்பு தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்தார். அவரும் கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெற்றார்.
இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதியாக உள்ள நீதிபதி டி.ராஜாவை பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசு தலைவர் உத்தரவிட்டார். கடந்த மூன்று மாதங்களாக சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக நீதிபதி டி.ராஜா செயல்பட்டு வருகின்றார்.
இந்நிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் அடங்கிய கொலிஜியம் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பிறகு சென்னை உயர்நீதிமன்றம் பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள டி.ராஜாவை ராஜஸ்தான் மாநில உயர்நீதிமன்ற நீதிபதியாக மாற்ற மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்றவுடன் குடியரசு தலைவருக்கு பரிந்துரை செய்யப்படும். பின்னர் குடியரசு தலைவர் பணியட மாறுதல் உத்தரவை பிறப்பிப்பார். இதற்கான உத்தரவு விரைவில் வரும் என தெரிகிறது.
நீதிபதி டி.ராஜா கடந்து வந்த பாதை!
நீதிபதி டி.ராஜா, மதுரை மாவட்டம் தேனூர் கிராமத்தில் கடந்த 1961 ஆம் ஆண்டு மே மாதம் 25 ஆம் தேதி பிறந்தார். பள்ளிப்படிப்பை தேனூர் ஊராட்சி ஒன்றிய பள்ளியிலும் உயர் கல்வியை மதுரை பசுமலை பள்ளியிலும், பின்னர் பி.யூ.சி படிப்பை வக்ஃப் வாரிய கல்லூரியிலும், பி.ஏ. மற்றும் ஏம்.ஏ. படிப்பை மதுரை கல்லூரியிலும் முடித்த நீதிபதி டி.ராஜா, சட்டபடிப்பை மதுரை அரசு சட்டக்கல்லூரியில் முடித்து கடந்த 1988ஆம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்தார்.
பின்னர் மூத்த வழக்கறிஞர் சி.செல்வராஜிடம் ஜூனியராக பணியை தொடங்கிய ராஜா பின்னர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணி செய்தார். சிவில், கிரிமினல், அரசியல் சாசன வழக்குகள் நிபுணத்துவம் பெற்றவர். டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான ராஜா, கடந்த 2008 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசின் கூடுதல் வழக்கறிஞராக பணியாற்றினார். கடந்த 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 தேதி சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
பின்னர் கடந்த 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சென்னை உயர்நீதிமன்ற நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். நீதிபதி ராஜா அடுத்த ஆண்டு (2023) மே மாதம் 24 ஆம் தேதி பணி ஓய்வு பெறவுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
இதனிடையே ஓடிசா மாநில தலைமை நீதிபதியாக உள்ள முரளிதரனை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்ற கொலிஜியம் பரிந்துரையை மத்திய அரசு கடந்த மாதம் நிராகரித்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.