“ஆமாம் நான்தான் சிவசேனாவை உடைத்தேன்; எனக்கு துரோகம் செய்தால் பழிவாங்குவேன்!" – தேவேந்திர பட்னாவிஸ்

மகாராஷ்டிராவில் சிவசேனா கடந்த ஜூன் மாதம் இரண்டாக உடைந்தது. உத்தவ் தாக்கரே தலைமையில் ஓர் அணியாகவும், ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஓர் அணியாகவும் இப்போது செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. சிவசேனா இரண்டாக உடைவதில் தேவேந்திர பட்னாவிஸ் முக்கிய பங்காற்றினார் என்று அனைத்து தரப்பினரும் தெரிவித்தனர். ஆனால் சிவசேனாவில் நிலவிய உட்கட்சிப்பூசல் காரணமாகவே கட்சி இரண்டாக உடைந்தது என்று பா.ஜ.க கூறிக்கொண்டிருக்கிறது. மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்பதற்காக முதல்வர் பதவியைக்கூட வெறும் 40 எம்.எல்.ஏ-க்களை வைத்திருக்கும் ஏக்நாத் ஷிண்டேவுக்கு பா.ஜ.க வழங்கியிருக்கிறது. தற்போது சிவசேனாவின் சின்னத்தையும் ஏக்நாத் ஷிண்டேவுக்கு வாங்கிக்கொடுத்து உத்தவ் தாக்கரேவை ஒரேடியாக ஓரங்கட்டும் வேலையில் பா.ஜ.க ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில், தேவேந்திர பட்னாவிஸ், “சிவசேனாவை நான்தான் உடைத்தேன்” என்று தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாகப் பேட்டியளித்த அவர், “எனக்கு யாராவது துரோகம் செய்தால் நான் பழிவாங்குவேன். ஆம், நான் பழிவாங்கினேன்.

உத்தவ் தாக்கரே

உங்களுடன் ஆட்சி அதிகாரத்தை அனுபவித்துக்கொண்டு, உங்களுடனே எந்நேரமும் இருந்து கொண்டு, உங்களுடனே சேர்ந்து தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு உங்களை நேரடியாக முதுகில் குத்தினால், அரசியலில் நிலைத்து நிற்க அதை அவர்களுக்கு திரும்பக் கொடுக்கவேண்டும். இல்லையென்றால் அரசியலில் நீடிக்க முடியாது. அரசியலில் நீங்கள் நல்லவர்களாக இருக்கவேண்டும். அதே சமயம் யாரோ ஒருவர் உங்களை பயன்படுத்திவிட்டு உங்களுக்கு துரோகம் செய்தால், அப்படிப்பட்டவர்களுக்கு அவர்களின் இடத்தை காட்டவேண்டும். நானும் அப்படித்தான் அவருக்கு(உத்தவ்) காட்டினேன். அதற்காக என்னை நினைத்து பெருமைப்படுகிறேன். எனக்கு துரோகம் செய்தால் நான் பழிவாங்குவேன்” என்று தெரிவித்தார். 2019-ம் ஆண்டு மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு உத்தவ் தாக்கரே காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி அமைத்ததைத்தான் தேவேந்திர பட்னாவிஸ் துரோகம் என்று சொல்கிறார்.

மேலும், “2019-ம் ஆண்டு புனேயில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்புக்குப் பிறகு பிரச்னையை நேரில் பேசித்தீர்க்க உத்தவ் தாக்கரே இல்லத்துக்குச் செல்ல விரும்பினேன். ஆனால் அவர் என்னை சந்தித்து தேநீர் அருந்தக்கூட விரும்பவில்லை” என்றும் பட்நவிஸ் தெரிவித்தார். பழிவாங்க சிவசேனாவை உடைத்தேன் என்ற பட்னாவிஸ் கருத்து குறித்து கருத்து தெரிவித்த சிவசேனா எம்.பி.சஞ்சய் ராவுத், “மகாராஷ்டிரா கலாசாரத்தில் பழிவாங்கும் அரசியலுக்கு இடமில்லை. மகாராஷ்டிராவில் பழிவாங்கும் எண்ணத்தில் அரசியல் நடத்தப்படவில்லை. புதிய முன்னுதாரங்கள் மற்றும் மரபுகள் உருவாக்கப்பட்டால் அது மகாராஷ்டிரா கலாசாரத்துக்கு எதிரானவை.

சஞ்சய் ராவுத்

அரசியலில் கருத்து வேறுபாடுகள் சகஜம். ஆனால் மகாராஷ்டிரா அரசியலில் பழிவாங்குதல் என்ற வார்த்தையை யாரும் பயன்படுத்தியதில்லை. இது போன்ற அரசியலில் ஈடுபட்டதன் மூலம் பட்னாவிஸ் தனது அந்தஸ்த்தை குறைத்துக்கொண்டது துரதிஷ்டவசமானது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

தேசியவாத காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மகேஷ் இது குறித்து, “தேவேந்திர பட்னாவிஸ் மகாராஷ்டிரா அரசியலை கீழ் மட்டத்துக்கு கொண்டு சென்றுவிட்டார். மகாராஷ்டிரா எப்போதும் மாற்றத்தின் நிலமாகவே இருந்திருக்கிறது. பழிவாங்கும் பூமியாக இருந்ததில்லை. எங்களது கட்சி இது போன்ற செயலில் ஈடுபட்டதில்லை. நாங்கள் எந்தக் கட்சியையும் அரசியல்ரீதியாக அழிக்க நினைத்ததில்லை” என்று தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.