மக்கள் நீதி மய்யம் கட்சியை நடத்திவரும் கமல் ஹாசன் 2019ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தல், 2021ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தல் ஆகியவற்றில் தனித்து போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார். இதனையடுத்து மீண்டும் திரைப்படங்களில் பிஸியாகி உள்ளார். இப்படிப்பட்ட சூழலில் 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலை சந்திக்க தயாராகிவருகிறார். இது தொடர்பாக சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் கட்சி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் 85 மாவட்ட செயலாளர்கள், மாநில செயலாளர்கள், மண்டல நிர்வாகிகள் பங்கேற்றனர். துணை தலைவர்கள் மவுரியா, தங்கவேலு, செயலாளர்கள் செந்தில் ஆறுமுகம், சிவ இளங்கோ, கவிஞர் சினேகன், மூகாம்பிகை, முரளி அப்பாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் பேசிய மாவட்ட செயலாளர்கள் மக்களவைத் தேர்தலை வலுவாக எதிர்கொள்ளும் வகையில் கட்சியின் நடவடிக்கை அமைய வேண்டும் என்று வலியுறுத்தி பேசினர். அதுமட்டுமின்றி நடந்து முடிந்த இரண்டு தேர்தல்களில் செய்த தவறை வருகிற பாராளுமன்ற தேர்தலிலும் நாம் செய்துவிடக் கூடாது என்றும் நிர்வாகிகள் பேசினார்கள். தனித்து போட்டியிட்டு தேர்தலில் வெற்றி பெற முடியாததை சுட்டிக்காட்டியே நிர்வாகிகள் இதுபோன்ற கருத்துகளை தெரிவித்ததாக கருதப்படுகிறது.
இதையடுத்து கூட்டத்தில் பேசிய கமல் ஹாசன், “மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள நீங்கள் சுறுசுறுப்பாகவும் நம்பிக்கையுடனும் செயல்பட வேண்டும். மக்களின் மதிப்பை பெறும் வகையில் அனைத்து பகுதிகளிலுமே நமது செயல்பாடுகள் இருக்க வேண்டும். இதற்காக உங்கள் பகுதிகளில் உள்ள மக்கள் பிரச்சினைகளை கையில் எடுத்து அவைகளை சரி செய்வதற்கான பணிகளில் எப்போதும் போல தீவிரமாக செயல்படுங்கள்.
கிராமப் புறங்கள் தொடங்கி நகர் புறங்கள் வரையில் கட்சியை வலுப்படுத்தினால் தான் நம்மால் வெற்றி பெற முடியும். பாராளுமன்ற தேர்தலை எப்படி சந்திப்பது? என்பது பற்றி நீங்கள் குழப்பம் அடைய வேண்டாம். கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கலாமா? என்பது பற்றி நாம் தீவிரமாக ஆலோசித்து முடிவு செய்வோம். நீங்கள் கட்சி பணிகளில் வேகம் காட்டுங்கள். கூட்டணி அமைப்பது போன்ற மற்ற விஷயங்களை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றார்.
முன்னதாக, சமீப காலங்களில் திரைப்பட துறையில் கமல் ஹாசன் உதயநிதியுடன் இணைந்து பணியாற்றிவருகிறார். மேலும் திமுக தலைமையிலான ஆட்சியை விமர்சிப்பதையும் அவர் குறைத்துக்கொண்டார். இதற்கிடையே இனி வரும் தேர்தல்களில் தனித்து போட்டியிட்டால் இருக்கும் வாக்கு வங்கியும் காலியாகிவிடும். அது தொண்டர்களின் உற்சாகத்தை குறைத்துவிடும் என்பதால் திமுகவுடன் கூட்டணி அமைக்க அவர் திட்டமிட்டிருப்பதாகவும் விரைவில் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை கமலே வெளியிடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.