சென்னை: பால் விற்பனையை அதிகரிக்க டீ கடைகள், உணவகங்கள், தனியார் நிறுவனங்களிடமிருந்து ஆர்டர்களை பெற வேண்டும் என்று ஆவின் அதிகாரிகளுக்கு அமைச்சர் நாசர் அறிவுறுத்தினார்.
ஆவின் பால் உற்பத்தி மற்றும் பால் பண்ணை மேம்பாட்டுத்துறை, மாவட்ட துணைப்பதிவாளர்கள் (பால்வளம்), அனைத்து மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றிய பொது மேலாளர்களுடன் பால் வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் இன்று (நவ.17) ஆய்வு கூட்டம் நடத்தினார். இக்கூட்டத்தில், மாவட்ட வாரியாக பால் உற்பத்தி, கொள்முதல் மற்றும் விற்பனை குறித்தும் நிலுவையில் உள்ள தணிக்கை அறிக்கை மற்றும் அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் விவாதித்தார்.
குறிப்பாக, பால் மற்றும் பால் உபபொருட்களின் கடந்த மூன்று மாதங்கள் (ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர்) விற்பனை விவரத்தினை ஒப்பிட்டு குறைந்த விற்பனை மேற்கொண்ட ஒன்றியங்களுக்கு விற்பனையை அதிகரிக்க தகுந்த நடவடிக்கைகள் எடுக்க அறிவுறுத்தினார். பால் கொள்முதல் விலையை உயர்த்தியதை தொடர்ந்து பால் கொள்முதல் அதிகரித்து வருவதால், கொள்முதல் அளவினை மேலும் உயர்த்த உத்தரவிட்டார். பால் விற்பனையை கூட்டும் விதமாக டீ கடை, ஓட்டல்கள், கேண்டீன்கள் மற்றும் தனியார் நிறுவனங்களிடமிருந்து ஆர்டர்களை பெற விற்பனை பிரிவு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மேலும் மழை நாட்களில் பால் மற்றும் பால் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பதை பால் பண்ணைகள் கட்டுப்பாட்டு அறைகள் மூலம் 24 மணிநேரமும் கண்காணிக்க உத்தரவிட்டார். கோடைகாலத்தில் ஐஸ்கிரீம், தயிர், மோர், லஸ்ஸி போன்ற பால் பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்கும் விதமாக ஆவின் குல்பி தயாரிப்பினை ஈரோடு, விழுப்புரம், வேலூர், திருநெல்வேலி உள்ளிட்ட ஒன்றியங்களில் அதிகப்படுத்தவும், சென்னை அம்பத்தூர் மற்றும் மதுரை ஐஸ்கிரீம் அலகுகள் முழு உற்பத்தி திறனையும் பயன்படுத்தி விற்பனையை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.