டெல்லி: ஒன்றிய அரசு நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் கச்சா எண்ணெய் மீதான வரியை டன் ஒன்றுக்கு 700 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. 9,500 ரூபாயாக இருந்த வரி இன்று முதல் 10,200 ரூபாயாக அதிகரிக்கப்பட்டிருப்பதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் மீதான வரியை ஒன்றிய அரசு நேற்று உயர்த்தியதுடன் டீசல் ஏற்றுமதிக்கான விகிதத்தை குறைத்தது. ஓஎன்ஜிசி போன்ற நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் கச்சா எண்ணெய் மீதான வரி இன்று முதல் டன் ஒன்றுக்கு 9.500லிருந்து 10,200ஆக உயர்த்தப்பட்டிருப்பதாக ஒன்றிய அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 வாரங்களில் ஒருமுறை விதிக்கப்படும் வரி திருத்தத்தில் டீசல் ஏற்றுமதிக்கான விலை டீசலுக்கு 13 ரூபாயில் இருந்து 10.50 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இதில் லிட்டருக்கு 1.50 ரூபாய் சாலை உள்கட்டமைப்பு செஸ் வரி அடங்கும். நவ.1ம் தேதி நடைபெற்ற மதிப்பாய்வில் லிட்டருக்கு 5 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்த ஜெட் எரிபொருள் மீதான ஏற்றுமதி வரியில் மாற்றம் செய்யப்படவில்லை. வரி விதிப்பு முதல் முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட போது டீசல் மற்றும் ஜெட் எரிபொருள் ஏற்றுமதிக்கு வரி விதிக்கப்பட்டது. ஆனால் அடுத்தடுத்த இரு வார மதிப்பாய்வுகளில் பெட்ரோல் மீதான வரி மட்டும் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.