தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பிஸியாக நடித்துவருபவர் பிரகாஷ் ராஜ். மிகச்சிறந்த நடிகரான பிரகாஷ் ராஜுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றன. வில்லன் கதாபாத்திரத்திலேயே வித்தியாசம் காட்டி நடிக்கும் பிரகாஷ் ராஜ் குணச்சித்திர வேடங்களிலும் அசத்தல் நடிப்பை கொடுப்பவர். சமீபத்தில் தமிழில் இவர் நடித்த திருச்சிற்றம்பலம் பெரும் ஹிட்டடித்தது. நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்திவந்த பிரகாஷ் ராஜ் தனது தோழியும், பத்திரிகையாளருமான கௌரி லங்கேஷ் கொலைக்கு பிறகு அரசியல் கருத்துக்களையும் கூறிவருகிறார்.
குறிப்பாக பாஜகவையும், இந்துத்துவா அமைப்புகளையும் விளாசிவரும் பிரகாஷ் ராஜ் கடந்த மக்களவைத் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடவும் செய்தார். மேலும், பிரதமர் மோடியின் நடவடிக்கைகளை மிகக்கடுமையாக விமர்சித்துவருகிறார்.
இந்நிலையில் தான் தீவிரமாக அரசியல் பேசிவருவதால் தன்னுடன் இணைந்து நடிப்பதற்கு பலர் அஞ்சுகின்றனர் என்கிறார் பிரகாஷ் ராஜ். இதுகுறித்து அவர் பேட்டி ஒன்றில் பேசுகையில், “சமீப காலமாக நான் அரசியலில் தீவிரம் காட்டி வருகிறேன். இதனால் ஒரு காலத்தில் என்னோடு இணைந்து நடித்தவர்கள் இப்போது சேர்ந்து நடிக்க ஆர்வம் காட்டுவதில்லை. நான் அரசியல் பேசுவதால் என்னுடன் நடிக்க பயப்படுகிறார்கள்.
என்னோடு நடித்தால் அவர்களை ஏற்றுக்கொள்ள மாட்டோர்களோ என்ற அச்சம் அவர்களுக்கு உள்ளது. அந்த பயத்தோடு என்னை விட்டு அவர்கள் விலகுகிறார்கள். இது என் சினிமாவில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதற்காக நான் வருந்தவில்லை. அப்படிப்பட்டவர்களை இழக்க நான் தயாராகவே இருக்கிறேன்.
எப்படிப்பட்ட விளைவுகளையும் சந்திக்க தயாராக இருக்கிறேன். இப்போதுதான் நான் மேலும் சுதந்திரமாக இருப்பதாக நினைக்கிறேன். எனது குரலை ஒலிக்கச் செய்யாவிட்டால் ஒரு நடிகனாக மட்டுமே இறந்து விடுவேன். நிறைய நடிகர்கள் மவுனமாக இருக்கிறார்கள். அவர்களை குறை கூற விரும்பவில்லை. ஒரு வேளை அவர்கள் பேசினால் அதனால் வரும் விளைவுகளை அவர்களால் தாங்க முடியாது” என்றார்.