பாஜகவின் கோட்டையாக திகழும் குஜராத் மாநிலத்தில் வரும் டிசம்பர் 1, 5 ஆகிய தேதிகளில் இருகட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8ஆம் தேதி நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 92 இடங்களை கைப்பற்றும் கட்சியே பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடிக்கும். கடந்த 24 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சிக் கட்டிலில் இருக்கும் பாஜகவை வீழ்த்த
காங்கிரஸ்
காய்களை நகர்த்தி வருகிறது.
மறுபுறம் ஆம் ஆத்மி கட்சியின் வருகையானது வாக்கு வங்கி அச்சத்தை பாஜக, காங்கிரஸ் என இரண்டு கட்சிகளிடமும் ஏற்படுத்தியுள்ளது. இதில் பெரிதும் கவலைப்படுவது காங்கிரஸ் கட்சியே. ஏனெனில் 2002ல் இருந்து படிப்படியாக தனது வெற்றியை அதிகப்படுத்தி 51 டூ 78 என முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இதேபோல் வாக்கு சதவீதமும் 39.28ல் இருந்து 41.4ஆக அதிகரித்துள்ளது.
2017 தேர்தலில் பாஜக 49 சதவீத வாக்குகளை பெற்றது. இந்த சூழலில் கடந்த தேர்தலை விட கூடுதலாக 14 இடங்களை கைப்பற்றி புதிய வரலாறு படைக்க காங்கிரஸ் திட்டமிட்டு வருகிறது. ஆனால் இழந்த வாக்குகளை வசப்படுத்தி மூன்று இலக்க எண்ணிக்கையில் வெற்றி பெற பாஜக முனைப்பி காட்டி கொண்டிருக்கிறது. இவர்கள் இருவருக்கும் டஃப் கொடுக்கும் வகையில் ஆம் ஆத்மி புது கணக்கு போட்டு வைத்துள்ளது.
அதாவது, 2017 சட்டமன்ற தேர்தலில் பாஜக பெற்ற வாக்குகளில் 2 சதவீதத்தையும், காங்கிரஸின் 20 சதவீத வாக்குகளை ஆம் ஆத்மி கட்சி வசப்படுத்தக்கூடும் என்று சொல்லப்படுகிறது. பொதுவாக வாக்குகள் மூன்றாக பிரியும் போது, அது ஆளுங்கட்சிக்கு சாதகமாக முடிந்துவிடும். இந்த விஷயம் 2022 சட்டமன்ற தேர்தலிலும் அரங்கேறுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இதற்கிடையில் குஜராத் சட்டமன்ற தேர்தலின் இரண்டு கட்ட தேர்தல்களிலும் இருவிதமான வியூகங்களை ஆம் ஆத்மி வகுத்து வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல்கட்ட தேர்தலில் காங்கிரஸின் வாக்குகளை சரிபாதியாக பிரித்து தன்வசப்படுத்துவது. இரண்டாம் கட்ட தேர்தலில் காங்கிரஸ் கட்சியை முழுவதுமாக அகற்றிவிட்டு பாஜகவின் நேரடி எதிர்க்கட்சியாக மாறுவது.
ஒட்டுமொத்தமாக பாஜகவிற்கு சாதகமான சூழல் தான் நிலவி கொண்டிருப்பதை பார்க்கலாம். மற்ற மாநிலங்களுக்கும் குஜராத் மாநிலத்திற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. ஏனெனில் இம்மாநிலம் பாஜகவின் இந்துத்துவா கொள்கையில் ஊறி திளைத்து காணப்படுகிறது. இஸ்லாமிய வாக்கு வங்கி என்பது வெறும் 9 சதவீதம் மட்டுமே.
குஜராத் மாநிலத்தின் வாக்காளர்களில் 22 சதவீதம் எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவை சேர்ந்தவர்கள். 40 சதவீதம் பேர் ஓ.பி.சி வகுப்பினர். எனவே ஆம் ஆத்மியால் நடப்பு தேர்தலில் பெரிதாக எதையும் செய்துவிட முடியாது. டெல்லி மாடலை அறிமுகம் செய்தாலும் பாஜகவின் கோட்டையை தகர்ப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. ஒருவேளை 2027 தேர்தல் ஆம் ஆத்மிக்கு கைகொடுக்கலாம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.