புதுச்சேரி: எம்பிசி இடஒதுக்கீட்டை ரத்து செய்ததைக் கண்டித்து பாமகவினர் ஊர்வலமாகச் சென்று புதுச்சேரி சட்டப்பேரவையை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் பேரவைக் கதவுகள் மூடப்பட்டன.
புதுச்சேரி காவல்துறை சப் இன்ஸ்பெக்டர், தீயணைப்புத் துறை டிரைவர் மற்றும் புள்ளியியல் ஆய்வாளர், வாகன ஆய்வாளர் ஆகிய பணிகளுக்கு அரசு தேர்வு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அரசின் அறிவிப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு இடம்பெறவில்லை. இதற்கு பாமக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்ததை கண்டித்தும், முன்பு இருந்த இடஒதுக்கீட்டு அரசாணையை பின்பற்ற வேண்டும். பெரும்பான்மை வன்னிய சமுதாயத்தை வாழ்வாதாரத்தை அழிக்கக் கூடாது என்று வலியுறுத்தி அண்ணாசிலை அருகில் இருந்து சட்டப்பேரவையை நோக்கி ஊர்வலமும் நடக்கும் என்று பாமகவினர் அறிவித்தனர். அதன்படி, இன்று காலையில் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் இருந்து இருசக்கர வாகனம், ஆட்டோ, டெம்போ, வேன் மூலம் பாமகவினர் அங்கு திரண்டனர். அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டனர். ஊர்வலமாக மாநில அமைப்பாளர் கணபதி தலைமை வகித்தார்.
ஊர்வலம் அண்ணாசாலை, நேரு வீதி, மிஷன் வீதி, ஜன்மராக்கினி கோயில் வழியாக சட்டப்பேரவை நோக்கி வந்தது. போலீஸார் ஆம்பூர் சாலை அருகே பேரிகார்டு அமைத்து ஊர்வலத்தை தடுக்க திட்டமிட்டனர். ஆனால், ஊர்வலத்தில் வந்தோர் பேரிகார்டை தள்ளி முன்னேற முயன்றனர். இதற்கிடையில் ஊர்வலத்தின் பின்புறத்தில் இருந்து போலீஸாரை நோக்கி தண்ணீர் பாக்கெட், கற்கள் வீசப்பட்டன. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஊர்வலத்தின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய போலீஸார் அங்கு இல்லை.
போலீஸாரால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. ஒருகட்டத்தில் போலீஸாரை தள்ளிவிட்டு, சட்டப்பேரவை நோக்கி முன்னேறினர். அப்போது வழியில் நிறுத்தப்பட்டிருந்த பல டூவீலர்கள் கீழே தள்ளிவிடப்பட்டு சேதமடைந்தன. வேகமாக பேரவையை நோக்கி சென்றதால் சட்டப்பேரவை நுழைவாயில்கள் மூடப்பட்டன. சட்டப்பேரவை அருகே பாமகவினர் அதிகளவில் வந்ததால் பதற்றம் ஏற்பட்டது. சட்டப்பேரவை முன்பு அமர்ந்து பாமகவினர் தர்ணாவில் அமர்ந்து கோஷம் எழுப்பினர். போலீஸார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அங்கிருந்து கலைய கோரியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. பாமகவினர் தலைமையினர் சமாதனப்படுத்தியதால் பாமகவினர் ஆம்பூர் சாலை பகுதிக்கு சென்றனர். அங்கு இடஒதுக்கீட்டினை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இது குறித்து பாமக மாநில அமைப்பாளர் கணபதி கூறுகையில், “புதுச்சேரியில் அரசு வேலைவாய்ப்பில் பின்பற்றப்பட்ட பழைய இடஒதுக்கீடு முறையே தொடர வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் அடுத்த கட்டமாக மருத்துவர் ராமதாஸின் ஆலோசனை பெற்று ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்று கூறினார்.