கரூர்: கரூர் அருகே 3 தொழிலாளர்கள் உயிரிழந்த கழிவுநீர் தொட்டியில் இருந்து 2 நாட்களுக்கு பிறகு மேலும் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கரூர் அருகேயுள்ள தோரணக்கல்பட்டியை அடுத்த கரட்டுப்பட்டி காந்தி நகரில் வழக்கறிஞர் குணசேகரன் புதிதாக வீடு கட்டி வருகிறார். இதில் புதிதாக கட்டப்பட்ட கழிவுநீர் தொட்டி (செப்டிக் டேங்) கடந்த 2 மாதங்களாக மூடிப்போட்டு மூடப்பட்டிருந்த நிலையில், தொட்டியின் உள் பகுதியில் உள்ள இரும்புத்தகடுகள், கான்கிரீட்டுக்காக முட்டுக் கொடுக்கப்பட்டிருந்த சவுக்குக் கட்டைகளை பிரிக்கும் பணி நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதற்காக சென்ட்ரிங் தொழிலாளர்களான தோரணக்கல்பட்டியைச் சேர்ந்த சிவா என்கிற ராஜேஷ்குமார் (38), தாந்தோணிமலை சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்த மோகன்ராஜ் (23), மாயனூர் அருகேயுள்ள சின்னமலைப்பட்டியைச் சேர்ந்த சிவக்குமார் (38) ஆகியோர் கழிவுநீர் தொட்டியில் இறங்கியப்போது விஷவாயு தாக்கி உள்ளே இருந்த ஒன்றரை அடி தண்ணீரில் மயங்கி விழுந்ததாக கூறப்பட்டது.
தகவலறிந்து வந்த கரூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறையினர் 3 பேரையும் மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் 3 பேரும் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தாந்தோணிமலை போலீஸார் வெங்கமேடு ஓம்சக்தி நகரை சேர்ந்த கொத்தனார் கார்த்திக் (35), வீட்டு உரிமையாளரான வழக்கறிஞர் குணசேகரன் (41) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3 தொழிலாளர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 3 தொழிலாளர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும். அரசு இழப்பீட்டை உடனடியாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று போராட்டம் நடத்தினர். அதன் பிறகு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நிவாரணம் பெற்று தர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து 3 பேர் குடும்பத்தினரும் சடலங்களை பெற்றுக் கொண்டனர்.
இந்த நிலையில், சின்னமலைப்பட்டியைச் சேர்ந்த விஜயா தன் கணவர் கோபால் (36) சிவக்குமாருடன் வேலைக்கு சென்றவரை கடந்த 2 நாட்களாக காணவில்லை என தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சந்தேகத்தின் பேரில் கரூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறையினர் அதே கழிவுநீர் தொட்டியில் தேடியபோது கோபால் சடலத்தை கண்டு மீட்டுள்ளனர். தாந்தோணிமலை போலீஸார் சடலத்தை கைப்பற்றி கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தை டிஎஸ்பி கு.தேவராஜ், கரூர் கோட்டாட்சியர் பா.ரூபினா, வட்டாட்சியர் சிவக்குமார் ஆகியோர் பார்வையிட்டனர். கழிவுநீர் தொட்டியில் தேங்கியிருக்கும் தண்ணீர் மோட்டார் வைத்து வெறியேற்றப்பட்டதுடன், தொட்டியின் மேல்பகுதி கான்கிரீட்டை இடித்து அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.