நாடாளுமன்ற குளிர்கால தொடர் அடுத்த மாதம் 7ம் தேதி துவக்கம்: 23 நாட்களில் 17 அமர்வுகள் நடைபெறும்

புதுடெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்ட தொடர் அடுத்த மாதம் 7ம் தேதி துவங்கி 29ம் தேதி வரை நடைபெறுகிறது. நாடாளுமன்ற புதிய கட்டிட பணிகள் நடைபெற்று வருவதால் பழைய கட்டிடத்திலேயே கூட்டம் நடக்கும். ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறும். இமாச்சல பிரதேச, குஜராத் சட்டமன்ற தேர்தல் காரணமாக இந்தாண்டு சற்றே தாமதமானது. நாடாளுமன்ற கூட்டம் தொடங்கும் தேதிகள் குறித்து மக்களவை, மாநிலங்களவை  செயலகம் தனித்தனியாக அறிவிக்கை வெளியிட்டுள்ளன. இதுபற்றி அரசு வட்டாரங்கள் கூறுகையில், ‘நாடாளுமன்றத்துக்கு புதிய கட்டிடம் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகள் அடுத்த ஆண்டு இறுதி வரை நடைபெறும் என தெரிகிறது.

இதனால், பழைய கட்டிடத்திலேயே குளிர்கால கூட்டம் நடைபெறும்,’ என தெரிவித்தன. ஒன்றிய நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரகலாத் ஜோஷி டிவிட்டரில் வௌியிட்டுள்ள பதிவில், ‘நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர், டிசம்பர் 7ம் தேதி தொடங்கி 29ம் தேதி வரை நடைபெறும். கூட்டத்தொடரில் மொத்தம் உள்ள 23 நாள்களில் 17 அமர்வுகள் நடக்கும். அமுத கால கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக விவாதங்கள் இருக்கும். ஆக்கப்பூர்வ விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கிறேன்,’ என்று குறிப்பிட்டுள்ளார். கூட்டம் தொடங்குவதற்கு முன் இரு அவைகளும் சுமூகமாக நடைபெறுவதில் ஒருமித்த கருத்தை ஏற்படுத்த மக்களவை சபாநாயகரும், மாநிலங்களவை தலைவரும் அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்டி பேச உள்ளனர். இந்த தொடரில் பொருளாதார சூழல், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை  எதிர்க்கட்சிகள் எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.