திமுக தலைமையில்தான் ‘மெகா கூட்டணி’ – மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் உறுதி

திண்டுக்கல்: தமிழகத்தில் திமுக தலைமையிலான அணிதான் மெகா கூட்டணி என மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்தார். திண்டுக்கல்லில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடிப்பதை தடுக்க மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எத்தனையோ பிரச்சினை இருக்கும்போது 6 பேர் விடுதலைக்கு மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்கிறது. குஜராத் பில்கீஸ்பானு வழக்கில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டும் குற்றவாளிகளை முன்னதாகவே விடுதலை செய்வதை பற்றி மத்திய அரசு கவலைப்படவில்லை.

தமிழகத்தில் இருந்து ஆட்களை காசிக்கு அழைத்துச் சென்று கலாச்சாரம், பண்பாட்டை கற்றுத் தருவதாக சொல்கின்றனர். இது மத்திய, மாநில அரசுகளின் திட்டம் இல்லை. இதில் ஐ.ஐ.டி. மாணவர்களை அழைத்துச் செல்கின்றனர். மாணவர்களை ஆர்எஸ்எஸ் உறுப்பினர் ஆக்கும் முயற்சிதான் இது. காசி சங்கமம் என தமிழகத்தில் இருந்து ஆட்களை அழைத்துச்சென்றால் இனி ரயிலுக்கு முன்பு மறியல் நடத்தப்படும். இதை தமிழக அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது.

அரசு பணியில் அவுட் சோர்சிங் முறை ஆபத்தானது. கால்பந்து வீராங்கனை இறந்த சம்பவத்தில் மருத்துவர்களின் அலட்சியம்தான் உள்ளது. ஐயப்பன் கோயிலுக்குள் பெண்கள் செல்ல தடை விதித்ததை மார்க்சிஸ்ட் ஏற்கவில்லை. இதுதொடர்பான வழக்குநிலுவையில் உள்ளதால் கேரள அரசு தனியாக அனுமதிக்க முடியாது.

திமுக தலைமையிலான மதசார்பற்ற அணிதான் மெகா கூட்டணி. இது கட்சிகளின் எண்ணிக்கையை பொறுத்தது இல்லை. கட்சிகளின் செல்வாக்கை பொறுத்தது. முகவரி இல்லாத கட்சிகள் பல சேர்ந்து மெகா கூட்டணி என எப்படி சொல்ல முடியும். பழனிசாமிக்கு செல்வாக்கு பெருகிவிடவில்லை. பாஜகவுக்கு மவுசும் கூடிவிடவில்லை. இதனால் அந்த அணிக்குபெரும் ஆதரவு இருப்பதாக சொல்ல முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.