தோஹா: இந்தியாவில் தடை செய்யப்பட்ட மதபோதகர் ஜாகீர் நாயக் கத்தார் நாட்டில் நிகழும் ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் மதச் சொற்பொழிவுகள் நிகழ்த்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனை கத்தார் அரசுக்கு சொந்தமான அல்காஸ் என்ற விளையாட்டு சேனல் தொகுப்பாளர் ஃபைசல் அல்ஜாரி உறுதிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “மத போதகர் ஷேக் ஜாகீர் நாயக் கத்தார் வந்துள்ளார். உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் முடிவுறும் வரையில் அவர் மத சொற்பொழிவுகள் நிகழ்த்துவார்” என்று பதிவிட்டுள்ளார்.
அரசு ஊடக்த்துறை அதன் ட்விட்டரில், “ஃபிஃபா உலகக் கோப்பையை ஒட்டி தலைசிறந்த இஸ்லாமிய அறிஞர்களில் ஒருவரான டாக்டர் ஜாகீர் நாயக் கத்தார் வந்துள்ளார்” என்று பதிவிட்டுள்ளது.
ஜாகீர் நாயக், மஹாராஷ்ட்ரா மாநிலம், மும்பையில் பிறந்தவர். புனித பீட்டர் பள்ளியிலும் கிஷின்சந்த் செல்லாராம் கல்லூரியிலும் படித்தவர். மும்பை பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பை படித்தார். ஆனால், மருத்துவத் தொழிலைவிட, மார்க்கப் பணிகளில் அவர் அதிகர் ஆர்வம் காட்டினார். 1991-ம் ஆண்டு ‘தாவா’ என்ற மதப்பிரச்சாரத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். தாவா என்பது இஸ்லாமிய மதத்தை பிறரை தழுவச் செய்யும் பணி எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் இஸ்லாமிய ஆராய்ச்சி மையம் ஒன்றையும் தொடங்கி, அதை அவரே வழிநடத்திச் சென்றார்.
ஆனால் இவரது பிரச்சாரங்கள் வெறுப்பை தூண்டுவதாக, பிரிவினையை ஊக்குவிப்பதாக, தீவிரவாதத்தை ஊக்குவிப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில், சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத போதகர் ஜாகீர் நாயக் நடத்தி வரும் இஸ்லாமிய ஆய்வு அறக் கட்டளையை (ஐஆர்எப்) சட்ட விரோத அமைப்பாக மத்திய அரசு அறிவித்தது. 2016ல் இந்த தடை அமலுக்கு வந்தது. அதன்பின்னர் 2017ல் ஜாகீர் நாயக் மலேசியாவிற்கு சென்றார். அதன்பின்னர் அவர் இந்தியா திரும்பவே இல்லை. இந்தியா அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது. இந்நிலையில், இந்தியாவில் தடை செய்யப்பட்ட மதபோதகர் ஜாகீர் நாயக் கத்தார் நாட்டில் நிகழும் ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் மதச் சொற்பொழிவுகள் நிகழ்த்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.