நாமக்கல்: கத்தாரில் நடைபெறும் உலக கோப்பை கால்பந்து போட்டி காரணமாக நாமக்கல்லில் இருந்து கத்தாருக்கு 1.50 கோடி முட்டை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக முட்டை ஏற்றுமதியாளர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக முட்டை ஏற்றுமதியாளரும், நாமக்கல் கால்நடை வளர்ப்பு மற்றும் பண்ணை உரிமையாளர்கள் வர்த்தக சங்கத்தின் பொதுச் செயலாளருமான டாக்டர் பி.வி.செந்தில் கூறியதாவது: நாமக்கல் மண்டலத்தில் 1,100 கோழிப்பண்ணைகள் உள்ளன.
இங்கிருந்து அதிகளவில் முட்டை ஏற்றுமதியாகும் நாடுகளில் கத்தாரும் ஒன்று. தற்போது, அங்கு உலக கோப்பை கால்பந்து திருவிழா நடைபெறுவதால், அங்கு உணவுப் பொருட்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. குறிப்பாக முட்டையின் தேவை அதிகரித்துள்ளது. இதையடுத்து, நாமக்கல் மாவட்டத்தில் இருந்து கத்தாருக்கு 1.50 கோடி முட்டை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. தேவைக்கு ஏற்ப அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
4 கோடி முட்டைகள்: இதேபோல, நாமக்கல்லில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன், பஹ்ரைன் மற்றும் மாலத்தீவுக்கு மாதந்தோறும் சுமார் 2 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. தற்போது, இந்த நாடுகளுக்கு 4 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
உக்ரைன்-ரஷ்யா போர் காரணம் நாமக்கல்லைச் சேர்ந்த முட்டை ஏற்றுமதியாளர்கள் சிலர் கூறியதாவது: கத்தார் உள்ளிட்ட நாடுகள் இந்தியாவிடம் இருந்து அதிக முட்டைகளை வாங்க உக்ரைன் – ரஷ்யா போர் ஒரு முக்கிய காரணம். போர் காரணமாக சர்வதேச சந்தையில் கோழித் தீவனம் மற்றும் மூலப்பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இதன் காரணமாக முட்டை உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் துருக்கி போன்ற நாடுகள் விலையை உயர்த்தியுள்ளன.
துருக்கியில் 360 முட்டைகள் கொண்ட ஒரு பெட்டியின் விலை பொதுவாக 18 டாலர் முதல் 20 டாலர்கள் வரை இருக்கும். கடந்த மாதம் இது 36 டாலர்களாக உயர்ந்தது. அதைவிட நாமக்கல் முட்டை விலை குறைவு. இதனால், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், ஓமன் போன்ற நாடுகள் நாமக்கல்லில் இருந்து அதிகளவில் முட்டைகளை வாங்க தொடங்கியுள்ளன. இவ்வாறு அவர் கூறினர்.