இந்த படிப்புக்கு டிசம்பர் 5 வரை விண்ணப்பிக்கலாம்.. தமிழக அரசு உத்தரவு..!

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்துடன் சென்னை லயோலா கல்லூரி இணைந்து வழங்கும் ஊடகவியல் சான்றிதழ் படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை டிசம்பர் 5-ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு விட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகமும் சென்னையிலுள்ள லயோலா கல்லூரியும் (தன்னாட்சி) இணைந்து ஆறு மாத கால ஊடகவியல் சான்றிதழ் படிப்பை கட்டணமின்றி வழங்குகின்றன. ஊடகத் துறையில் ஆர்வம் கொண்டு செய்தியாளராக, எழுத்தாளராக, கருத்தாளராக தடம் பதிக்க விரும்பும் இளம் தலைமுறைக்குப் பெரும் வாய்ப்பாக இந்தப் படிப்பு வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

ஊடகத்துறையின் முன்னோடிகளால் மாணவர்கள் நேரடியாக பயிற்றுவிக்கப்படுகிறார்கள். தமிழ் இதழியல் உலகில் வளர்ந்து வரும் புதிய துறைகளில் ஆழ்ந்த அலசலுடன் எழுத வல்ல இளம் ஊடகர்களை உருவாக்கும் நோக்குடன் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் லயோலா கல்லூரியுடன் இணைந்து இந்த முன்முயற்சியை எடுத்திருக்கிறது.

ஊடகவியலுக்குத் தேவையான வலுவான அடிப்படைத் திறன்களை இந்தப் படிப்பு தருகிறது. கோட்பாடுகளையும் களப்பயிற்சிகளையும் சரியான விதத்தில் கலந்து தரும் வகையில் பாடத்திட்டம் அமைந்திருக்கிறது.கட்டணமில்லா இந்தப் படிப்பில், வாரந்தோறும் பயிற்சிப் பட்டறைகளும், கள ஆய்வுகளும் இடம்பெறுகின்றன. திறன்மிக்க ஊடகவியலாளர்கள் தொடர்ந்து மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கிறார்கள்.

மாணவர்கள் தங்கள் விருப்பத்துக்குரிய ஊடகப் பிரிவைத் தேர்ந்தெடுக்க ஊக்குவிக்கப்படுவார்கள். பொருளாதாரம் மற்றும் நிதி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், அரசியல் மற்றும் பண்பாடு, விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு உள்பட பல்வேறு ஊடகப் பிரிவுகளை மாணவர்கள் விருப்பத்திற்கேற்ப தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

எழுத்து, ஒளிப்படம், வீடியோ, வானொலி, தொலைக்காட்சி, சமூக ஊடகம், திறன்பேசி, ட்ரோன் இதழியல் உள்பட பல்வேறு ஊடகப் பிரிவுகளில் தக்க துறைசார் நிபுணர்கள் வழியாக மாணவர்கள் திறன்களைப் பெறுவார்கள். கடந்த இரு நூற்றாண்டுகளாக தமிழ்ச் சமூகம் மக்களாட்சிக்கும் தற்சார்பு இதழியலுக்குமான சூழலை உருவாக்கிப் பேணி வளர்ப்பதை அவர்கள் உணர்ந்துகொள்வார்கள்.

முன்னோடி சமூகத்தின் மரபில், பன்முக இதழியல் கல்வி அனுபவத்துடன் ஊடகப் பணிகளுக்கு ஆயத்தமாவார்கள். பட்டப்படிப்பு தேறிய 20 முதல் 25 வயது கொண்ட யாரும் இந்தப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வாகிறவர்கள் வாரம் ஐந்து நாள்கள் (திங்கள் முதல் வெள்ளி வரை) சென்னையிலுள்ள லயோலா கல்லூரியில் தினசரி வகுப்புகளுக்கு வர வேண்டும். ஊடகவியல் சான்றிதழ் படிப்பைப் பற்றி மேலும் அறிய https://www.loyolacollege.edu/CAJ/home என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கட்டணமில்லா இந்தப் படிப்புக்கு விண்ணப்பிக்க இன்று (நவ.21-ம் தேதி) கடைசி நாள் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, இந்த சான்றிதழ் படிப்பிற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை டிசம்பர் 5-ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.