அரியலூர் : இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்கு தேர்வாகியுள்ள அரியலூர் மாவட்ட இளம் வீரர் கார்த்திக் பின்தங்கிய நிலை குறித்த சன் நியூஸ் செய்தி எதிரொலியாக அவரது முன்னேற்றத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தமிழ்நாடு அரசு உறுதியளித்துள்ளது. அரியலூர் நகரை சேர்ந்த கார்த்திக் கடந்த மே மாதம் இந்திய ஹாக்கி அணிக்கு தேர்வானார். இவரது சந்தை செல்வம் வங்கியில் இரவு நேர காவலாளியாக பணியாற்றியவர். தற்போது அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். தாய் வளர்மதி வீட்டு வேலை செய்து சொற்ப வருமானம் ஈட்டி வருகிறார்.
ஏழ்மையான நிலையிலும் மகன் கார்த்திக்கை நன்றாக படிக்க வைத்த பெற்றோர் விளையாட்டிலும் சாதிக்க உறுதுணையாக நின்றனர். பெங்களூர் சாய் விளையாட்டு மையத்தில் பயிற்சி பெற்ற கார்த்திக் மே மாதம் இந்திய ஹாக்கி அணிக்கு தேர்வானார். ஆனால், அவரது பெற்றோர் வறுமையில் வாடும் செய்தியையும், அவர்களுக்கு அரசு உதவி கரம் நீட்ட வேண்டும் என்றும் குறிப்பிட்டு சன் நியூஸ் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது.
இதன் எதிரொலியாக முதலமைச்சர் உத்தரவின் பேரில் அரியலூர் சென்ற போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கார்த்திக்கின் பெற்றோரை சந்தித்தார். அந்த குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்றும், 24-ம் தேதி முதலமைச்சரின் கையால் இந்த தொகை வழங்கப்படும் என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார். கார்த்திக்கின் விளையாட்டு மேம்பாட்டுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என்று அமைச்சர் உறுதியளித்துள்ளார்.