கோவை கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு, கடந்த அக்டோபர் 23ஆம் தேதி காரில் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் ஜமேஷா முபின் என்ற ISIS ஆதரவாளர் உயிரிழந்தார். இதையடுத்து நவம்பர் 19ஆம் தேதி கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் முகமது ஷாரித் ISIS ஆதரவாளர்.
இதனால் ஜமீஷா முபினுக்கும், முகமது ஷாரித்திற்கும் இடையில் தொடர்பு இருக்கிறதா? இருவரும் கோவையில் சந்தித்துள்ளார்களா? தொலைபேசி மூலம் கோவையில் யாருடனாவது முகமது ஷாரித் பேசியுள்ளாரா? போன்ற கோணங்களில் கோவை போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். இவர்களுடன் உதகை மாவட்ட போலீசாரும் கைகோர்த்து விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
இதுகுறித்து விசாரணை நடத்த விரைவில் கர்நாடக போலீஸ் விரைவில் கோவை வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து நடக்கும் பயங்கரவாத செயல்பாடுகள் தென்னிந்தியாவில் பதற்றமான சூழலை உருவாக்கி வருவதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டுகின்றனர்.
மங்களூரு சம்பவத்தின் பின்னணி:
கர்நாடக மாநிலம் மங்களூரில் ஓடும் ஆட்டோவில் கடந்த 19ஆம் தேதி சனிக்கிழமை அன்று குக்கர் குண்டு வெடித்தது. அதில் இருவர் படுகாயம் அடைந்தனர். இது திட்டமிட்ட தாக்குதல் என கர்நாடக மாநில போலீசார் உறுதி செய்துள்ளனர். ஆட்டோவில் பயணித்த முகமது ஷாரித் என்பவரின் மொபைல் எண்ணை வைத்து போலீசார் விசாரணையை தொடங்கினர்.
முகமது ஷாரித் கடந்த 2020ஆம் ஆண்டு சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து 2021 ஜூலை மாதம் ஜாமீனில் விடுதலையானார். முகமது ஷாரித் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இந்த சூழலில் நவம்பர் மாதம் 4ஆம் தேதி ISIS அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக முகமது யாசின், முஜ் முனீர் ஆகிய இருவரை கர்நாடக போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கிலும் முகமது ஷாரித் தேடப்படும் குற்றவாளி ஆனார். இதற்கிடையில் ஜாமீனில் வந்திருந்த அவர் திடீரென தலைமறைவானதாக தெரியவந்தது. தொடர் விசாரணையில் கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் கடந்த செப்டம்பர் மாதம் முகமது ஷாரித் வந்து தங்கியது கண்டறியப்பட்டது.
அப்போது தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் உதகையை சேர்ந்த சுரேந்திரன் என்பவரை சந்தித்தாக சொல்லப்படுகிறது. சுரேந்தரனின் ஆதார் கார்டை பயன்படுத்தி மொபைல் சிம் கார்டு வாங்கியதாக தகவல்கள் வெளியாகின. உடனே சுரேந்திரனை உதகை போலீசார் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முகமது ஷாரிக்கிற்கும், தனியார் பள்ளி ஆசிரியர் சுரேந்திரனுக்கும் எப்படி தொடர்பு ஏற்பட்டது? என்பது குறித்தும் விசாரணை தீவிரமடைந்துள்ளது. இந்த வழக்கு விசாரணையால் தமிழக எல்லை பகுதிகள், கோவை, நீலகிரி மாவட்டத்தின் எல்லை பகுதிகள், நகர பகுதிகள் ஆகியவற்றில் வாகன சோதனை, கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.