2022 உலக கிண்ண கால்பந்து போட்டி ஆரம்பம்

2022 உலகக் கிண்ண கால்பந்து போட்டி (2022 FIFA World Cup), கத்தார் நாட்டில் நேற்று (20) ஆரம்பமானது.

இதனை முன்னிட்டு இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வு மிகவும் சிறப்பக இடம்பெற்றது.

உலகின் 2ஆவது மிகப்பெரிய விளையாட்டு திருவிழா உலக கிண்ண கால்பந்து போட்டியாகும். 

22ஆவது உலக கிண்ண கால்பந்து திருவிழா ஆசிய கண்டத்தில் உள்ள கத்தாரில் நேற்று (20) கோலாகலமாக ஆரம்பமானது.

எதிர்வரும் டிசம்பர் 18 ஆம் திகதி வரை 29 நாட்கள் இந்த கால்பந்து போட்டிகள் நடைபெறவுள்ளது.
மத்திய கிழக்கு வலயத்தில் நாடொன்றில் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டி நடைபெறுவது இதுவே முதலாவது சந்தர்ப்பமாகும்.

நடைபெற்ற 21 போட்டித் தொடர்களில் 5 முறை வெற்றிக் கிண்ணத்தை பிரேசில் அணி கைப்பற்றியுள்ளது. இம்முறை உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் 36 நாடுகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்கின்றன.

கடந்த போட்டித் தொடருக்கு அனுசரணை வழங்கிய ரஷ்யா , யுக்ரேனுடன் யுத்தம் செய்வதினால் இம்முறை போட்டியில் கலந்து கொள்வதற்கு உலக உதைபந்தாட்டச் சம்மேளனம் தடை விதித்துள்ளது. விளையாட்டரங்கில் மதுபானத்தைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதில் 32  அணிகள் பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் கத்தார் மட்டும் நேரடியாக தகுதி பெற்றது. மீதியுள்ள 31 நாடுகள் தகுதி சுற்று மூலம் நுழைந்தன. இந்த 32 நாடுகளும் 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்றுள்ளன.

ஏ பிரிவில் – கத்தார், ஈக்வடார், செனகல், நெதர்லாந்து

பி பிரிவில் – இங்கிலாந்து, ஈரான், அமெரிக்கா, வேல்ஸ்

சி பிரிவில் – அர்ஜென்டினா, சவுதி அரேபியா, மெக்சிகோ, போலந்து

டி பிரிவில் – பிரான்ஸ், அவுஸ்திரேலியா ,டென்மார்க், துனிசியா

இ பிரிவில் – ஸ்பெயின், கோஸ்டாரிகா, ஜெர்மனி, ஜப்பான்

எப் பிரிவில் – பெல்ஜியம், கனடா ,மொராக்கோ, குரோஷியா,

ஜி பிரிவில் – பிரேசில், செர்பியா, சுவிட்சர்லாந்து, கேமரூன்

எச் பிரிவில் – போர்ச்சுக்கல், கானா, உருகுவே, தென் கொரியா

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதவேண்டும். டிசம்பர் 2 ஆம் திகதியுடன் லீக் ஆட்டங்கள் முடிகிறது. இதன் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவில் இருந்தும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் 2ஆவது சுற்றான நாக் அவுட்டுக்கு தகுதி பெறும்.

டிசம்பர் 3 முதல் 6 ஆம் திகதி வரை 2ஆவது சுற்று நடைபெறும். இதில் 16 நாடுகள் விளையாடும். அதில் இருந்து 8 அணிகள் கால் இறுதிக்குள் நுழையும். டிசம்பர் 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் கால் இறுதியும்இ 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் அரை இறுதி ஆட்டங்களும் நடைபெறும். இறுதிப் போட்டி டிசம்பர் 18 ஆம் திகதி நடைபெறும்.

தொடக்க நாளில் ஒரே ஒரு ஆட்டம் நடைபெற்றது. இதில் ஏ பிரிவில் உள்ள கத்தார்-ஈக்வடார் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இதில் ஆரம்பம் முதலே அதிரடி தாக்குதலை தொடுத்த ஈகுவடார் அணி அபாரமாக ஆடியது. அந்த அணிக்கு ஆட்டத்தின் 16 ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை என்னர் வலென்சியா கோலாக்கினார். இதனை தொடர்ந்து 31 ஆவது நிமிடத்தில் வலென்சியா மேலும் ஒரு கோல் அடித்தார். இதனால் அந்த அணி முதல் பாதி ஆட்டத்தில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

இதையடுத்து தொடங்கிய இரண்டாவது பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டனர். இரு அணி வீரர்களும் கோல் அடிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டாலும் இறுதியில் கோல் அடிக்க இயலவில்லை. இதனால் இரண்டாம் பாதியில் கோல் எதுவும் விழவில்லை.

இறுதியில் ஈகுவடார் அணி முதல் பாதியில் அடித்த இரண்டு கோல்களின் அடிப்படையில் 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.