மங்களூரு ஆட்டோ குண்டு வெடிப்பு சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஷரீக், ஐஸ்ஐஎஸ் அமைப்பு மூலம் ஈர்க்கப்பட்டு சதிச் செயல்களில் ஈடுபட்டதாக, கர்நாடக மாநில ஏடிஜிபி அலோக் குமார் தெரிவித்து உள்ளார்.
கர்நாடக மாநிலம் மங்களூரில், அண்மையில், ஆட்டோ ஒன்றில் குண்டு வெடித்துச் சிதறியது. இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆட்டோவில் குண்டு வெடித்து சிதறியது தொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியது.
இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த கர்நாடக காவல் துறையினர், இந்த குண்டு வெடிப்பு சாதாரண விபத்து அல்ல என்றும், திட்டமிட்டு செய்யப்பட்ட பயங்கரவாத செயல் என்றும் தெரிவித்தனர். இதற்கிடையே, மங்களூரில் ஆட்டோவில் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு மைசூரு மாவட்டத்தைச் சேர்ந்த ஷரீக் என்பவருக்கு தொடர்பு இருப்பதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
இந்நிலையில், மங்களூரில் ஆட்டோ வெடி குண்டு தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்ட வெடி பொருட்களை பார்வையிட்ட பின் ஏடிஜிபி அலோக் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மைசூரில் தங்கி இருந்த வீட்டிலிருந்து வெடிகுண்டு தயாரிக்க தேவையான பொருட்கள் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். சர்க்யூட், தீப்பெட்டி, பேட்டரி, மெக்கானிக்கல் டைமர், ஆதார் கார்டு, சிம் கார்டுகள், மொபைல் போன் உள்ளிட்டவை பறிமுதல் செய்து தடயவியல் சோதனை நடைபெற்று வருகிறது.
உபா உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தலைமறைவாக இருந்த ஷரீக் தேடப்பட்ட குற்றவாளி என அறிவிக்கப்பட்டவர். மங்களூரில் ஆட்டோ வெடித்த வழக்கு தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றப்பட உள்ளது. மங்களூரு ஆட்டோ வெடித்த வழக்கில் காயமடைந்த ஷரீக் ஏற்கனவே ஒரு வழக்கில் தேடப்பட்டவர் தான்.
இரு வழக்குகளில் உபா சட்டம் போடப்பட்ட நிலையில் மேலும் ஒரு வழக்கில் தேடப்பட்டவர் தான் ஷரீக். ஆட்டோவில் பயணித்த ஷரீக்கிற்கு சர்வதேச பயங்கரவாத அமைப்புடன் தொடர்பிருக்கிறதா என விசாரணை நடைபெற்று வருகிறது. ஆட்டோவில் குண்டு வெடித்தது தொடர்பாக மைசூரில் 2 பேர், கோவையில் ஒருவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
மங்களூரு வெடிகுண்டு தாக்குதலுக்கும், கோவை கார் சிலிண்டர் வெடிப்புக்கும் தொடர்பு உள்ளதா என விசாரிக்க கோவை தனிப்படை போலீசார், என்ஐஏ அதிகாரிகள் மங்களூரு விரைந்தனர். மங்களூரு குண்டு வெடிப்பில் தொடர்புடைய ஷரீக் கோவை, மதுரை மற்றும் கேரளாவில் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.