நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகில் உள்ள பெட்டட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜெய்குமார்- அனுசியா தம்பதியர். நிறைமாத கர்ப்பிணியான அனுசியாவை மகப்பேறுக்காக குன்னூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்துள்ளனர். கடந்த 10-ம் தேதி இவருக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து இரண்டு நாள்கள் கழித்து 12-ம் தேதி அனுசியாவுக்கு குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இந்த அறுவை சிகிச்சைக்காக அனுசியாவுக்கு மயக்க மருந்து செலுத்தப்பட்டுள்ளது. ஆனால், அறுவை சிகிச்சை முடிந்தும் மயக்கம் தெளியாமல் தொடர்ந்து மயக்கத்தில் இருந்திருக்கிறார்.
அதைத் தொடர்ந்து, கோவை மாவட்டத்திலுள்ள தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த அதிர்ச்சியை தாங்க முடியாத அவர் உறவினர்கள் காவல்துறையில் புகாரளித்திருக்கின்றனர்.
இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய காவல்துறையினர், “குன்னூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துகொண்ட அனுசியாவின் மரணம் தொடர்பாக ஜெய்குமாரின் சகோதரி சரோஜா குன்னூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். சந்தேக மரணமாக வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறோம். மயக்க மருந்து அதிகம் கொடுக்கப்பட்டதா என்ற கோணத்திலும் மருத்துவர்கள் ஆய்வு செய்வார்கள்” என்றனர்.