ஜாஜ்பூர்: ஒடிசாவில் இன்று அதிகாலை சரக்கு ரயில் தடம் புரண்டதால் பயணிகள் காத்திருப்பு கட்டிடத்தின் ஒருபகுதி இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் 3 பேர் பலியாகினர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கிழக்கு கடற்கரை ரயில்வேயின் குர்தா சாலை ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட பத்ரக் – கபிலாஸ் சரக்கு ரயில், பத்ரக்கில் இருந்து கட்டாக் நோக்கி இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தது. அப்போது ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் அடுத்த கோரை ரயில் நிலையத்திற்கு சரக்கு ரயில் வந்த போது, எதிர்பாராத விதமாக ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டன. இந்த சம்பவத்தின் போது கோரை நிலையத்தின் பயணிகள் காத்திருப்பு கட்டிடத்தின் மீது சரக்கு ரயிலின் பெட்டிகள் மோதின.
இதனால் காத்திருப்பு கட்டிடத்திற்குள் இருந்த மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தால் ரயில் நிலைய கட்டிடங்களும் சேதமடைந்தன. மேலும், இந்த ரயில் பாதை வழியாக செல்லும் வழித்தடங்கள் மூடப்பட்டன. விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டனர். இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 3 பேரின் சடலங்கள் வெளியே எடுக்கப்பட்டன. படுகாயமடைந்த 10க்கும் மேற்பட்டோரை மீட்ட மீட்புக் குழுவினர், அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குர்தா சாலை டிஆர்எம் மற்றும் அதிகாரிகள் குழுவினர் விபத்து நடந்த பகுதியில் முகாமிட்டு மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ம.பி ரயிலில் நேற்றிரவு தீ
மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனி ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்தூர் – ரத்லாம் பயணிகள் ரயிலின் பெட்டியில் நேற்றிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சில ரயில் பெட்டிகள் கொழுந்துவிட்டு எரிந்தன. ஒரு ரயில் பெட்டி தீயில் முற்றிலும் எரிந்து சாம்பலானது. அதிர்ஷ்டவசமாக, விபத்து நடந்த போது ரயில் பெட்டிகள் காலியாக இருந்ததால், உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. நான்கு தீயணைப்பு படையினர், ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஷார்ட் சர்க்யூட் காரணமாக ரயில் தீப்பிடித்து எரிந்திருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.