சத்ரபதி சிவாஜி மகாராஜ் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துத் தெரிவித்த மகாராஷ்டிர மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை, டிரான்ஸ்பர் செய்ய வேண்டும் என முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே ஆதரவு எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் வலியுறுத்தி உள்ளார்.
மகாராஷ்டிர மாநிலத்தில், முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில், சிவசேனா – பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. சிவசேனா கட்சிக்கு, முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தரப்பும், உத்தவ் தாக்கரே தரப்பும் உரிமைக் கோரி வருவதால், அக்கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை பயன்படுத்த, இரு தரப்புக்கும் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
இதற்கிடையே, அண்மையில், அவுரங்கபாத்தில் உள்ள டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் மராத்வாடா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி கலந்து கொண்டு பேசுகையில், “உங்கள் லட்சிய மனிதர் யார் என்று யாராவது கேட்டால், நீங்கள் அவர்களை தேடி வெளியே செல்ல வேண்டியதில்லை. மகாராஷ்டிர மாநிலத்தில் நீங்கள் அவர்களை காணலாம். சத்ரபதி சிவாஜி மகாராஜ் இப்போது பழைய லட்சிய மனிதராகி விட்டார். பாபா சாகேப் அம்பேத்கர் முதல் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வரையிலான தலைவர்களில் ஒரு புதிய லட்சிய மனிதரை நீங்கள் காணலாம்,” என தெரிவித்து இருந்தார். சத்ரபதி சிவாஜியை பழைய லட்சிய மனிதர் என்று ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி குறிப்பிட்டதற்கு, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பாஜக கூட்டணியில் உள்ள, முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தரப்பு எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட், ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரிக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:
சத்ரபதி சிவாஜி மகாராஜின் லட்சியங்களுக்கு ஒருபோதும் வயது ஆகாது. அவரை உலகில் வேறு எந்த பெரிய மனிதருடன் ஒப்பிட முடியாது என்பதை ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி புரிந்து கொள்ள வேண்டும். மத்திய பாஜக தலைவர்களுக்கு எனது வேண்டுகோள் என்னவென்றால், மாநிலத்தின் வரலாறு தெரியாத ஒரு நபரை, வேறு எந்த இடத்திற்காவது டிரான்ஸ்பர் செய்யுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரிக்கு முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தரப்பில் இருந்து கண்டனம் எழுந்துள்ளது, மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.