தனக்கான வாய்ப்பும் அங்கீகாரமும் பெரிதாக இந்திய கிரிக்கெட்டில் இல்லை என்றாலும் தொடர்ச்சியாக 5 சதங்களை அடித்ததன் மூலமாக மூடப்பட்ட கதவுகளை உடைத்துத் தள்ளும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் தமிழகத்தைச் சேர்ந்த ஜெகதீசன்.
காலை எழுந்தவுடன் ஒரு டீ குடிப்பது போல ஒவ்வொரு நாளும் ஒரு சதம் அடித்து அசத்தி வருகிறார் ஜெகதீசன். இந்திய கிரிக்கெட், உலக கிரிக்கெட் என தினமும் ஒரு சாதனையை உடைப்பதுதான் இவரின் தற்போதைய பொழுதுபோக்கு. நாளேடுகளில் ஒரு ஓரமாக வந்த ஜெகதீசனின் பெயர் இந்த விஜய் ஹசாரே தொடருக்குப் பிறகு முக்கியச் செய்திகள் வரும் இடத்தில் வரத் தொடங்கியுள்ளது.
சில நேரங்களில் நாம் எவ்வளவுதான் திறமையானவர்களாக இருந்தாலும் நமக்கான காலம் என்ற ஒன்று வர வேண்டும். ஜெகதீசனுக்கு அப்படிப்பட்ட ஒன்று தற்போது வரை வந்ததாகத் தெரியவில்லை. ஆனால் காலத்தின் மீது பழி போட்டு ஒரு ஓரமாக ஒதுங்கிக் கொண்டோம் என்றால் வரலாறும் நம்மை அதே ஓரத்தில் ஒதுக்கி வைத்துவிடும். எதற்கும் அஞ்சாமல் எதிர்நீச்சல் போட்டு வருபவர்கள்தான் கடலைக் கடந்து கரையை காண முடியும். அப்படிப்பட்ட எதிர் நீச்சலைத்தான் அடித்துக் கொண்டிருக்கிறார் ஜெகதீசன்.
சுமார் ஆறு வருடங்களுக்கு முன்பு 2016-ம் ஆண்டு தமிழ்நாடு அணியில் அறிமுகமானவர் ஜெகதீசன். மத்திய பிரதேச அணிக்கு எதிராக முதல் போட்டியிலேயே சதம் கடந்தார். சுமார் எட்டு ஆண்டுகளில் இப்படி முதல் போட்டியிலேயே சதம் கடந்த தமிழக வீரர் இவர்தான்.
முதல் போட்டியில் லோயர் மிடில் ஆர்டரில் விளையாடினாலும் அடுத்த ஆண்டு ரஞ்சி தொடரிலேயே ஓப்பனராகக் களமிறங்கும் அளவுக்கு அவரிடம் திறமை இருந்தது. இருந்தாலும் ‘எனக்கு ஓப்பனிங் ஆடத்தான் வரும்’ என்றெல்லாம் முரண்டு பிடிக்காத வீரர். கடந்த 2018-ல் தினேஷ் கார்த்திக் இந்திய அணிக்குத் திரும்புவதற்காக டாப் ஆர்டரில் விளையாடியதால் ஜெகதீசன் மிடில் ஆர்டரிலும் சிறப்பாக ஆடினார். கூடவே தமிழ்நாடு பிரிமியர் லீக் தொடரிலும் தன்னுடைய முழு திறமையையும் வெளிப்படுத்த IPL வாய்ப்பு சென்னை அணி மூலமாகக் கிடைத்தது.
2018 IPL தொடரில் ஜெகதீசனுக்கு சீனியர் வீரர்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததேயொழிய தன் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கவில்லை. சென்னை நிர்வாகமும் சற்று கடினமான வார்த்தைகளுடன் “நாங்கள் கோப்பை வெல்லத்தான் விளையாடுகிறோமே தவிர இளம் வீரர்களை வளர்ப்பதற்கு அல்ல” என்று கூறியது. 2020ல் சென்னை அணி தடுமாறிய போது இளம் வீரர்களுக்குத் தேவையான உத்வேகம் (ஸ்பார்க்) இல்லை என்று தோனி விமர்சித்தார். அதன் பின்பு கிடைத்த வாய்ப்பிலும் ஜெகதீசனால் தனது முழு திறமையை வெளிப்படுத்த முடியவில்லை.
இப்படிப் போகிற இடங்களில் எல்லாம் வாய்ப்புகள் மறுக்கப்படுவதும் கிடைத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்த முடியாமல் போவதும் ஜெகதீசனுக்கு வாடிக்கையாகிவிட்டது. என்னதான் சென்னை அணி தனக்குப் பெரிய வாய்ப்புகளை தராவிட்டாலும், மைக் ஹசி போன்றோருடன் பயணித்த அனுபவம் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றத்தைக் கொடுத்துள்ளது என்று ஜெகதீசன் தெரிவித்துள்ளார். வாய்ப்பு கிடைக்கவில்லையே என்று மூலையில் முடங்கிவிடாமல் கிடைப்பதில் தனக்குத் தேவையானது எதுவோ அவற்றைத் தவறாமல் தேடியெடுத்து தன்னை மேம்படுத்திக் கொள்வதில் வல்லவர் இவர். சென்னை அணியுடன் இருந்தபோது முடிந்தவரை தோனியின் அறைக் கதவைத் தட்டி அவரின் அனுபவங்கள் மூலம் தனது கிரிக்கெட்டை வளர்த்துக் கொள்வதில் பெரிய ஆர்வம் காட்டியுள்ளார் ஜெகதீசன்.
சில மாதங்களுக்கு முன்பு நடந்த தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் Mankad முறையில் ஆட்டமிழந்த ஜெகதீசன் தன்னுடைய அதிருப்தியை சற்று மோசமான முறையில் வெளிப்படுத்திக் கொண்டே பெவிலியன் திரும்பினார். அப்போது சமூக வலைதளங்களில் அது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. அத்தனை ஆண்டுகள் ஜெகதீசன் அடித்த ரன்களின் முக்கியத்துவத்தைக் குறைப்பதாகவும், அவரின் தொடர் புறக்கணிப்புகளுக்கு நியாயம் சேர்க்கும் விதமாகவும் இந்தச் செயல் அப்போது பலரால் பகிரப்பட்டது. அதுவும் தொடரின் முதல் போட்டியிலேயே இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றது அவருக்கு மனரீதியாக நிச்சயம் ஒரு பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கக்கூடும். அவரின் பேட்டிங் செயல்பாடுகளும் சிறப்பாக இல்லாததால் மீண்டும் ஒருமுறை ஜெகதீசனின் முன்பு மூடப்பட்ட கதவுகள்தான் நின்றன.
எத்தனை முறை தனது உழைப்பு வீணானாலும் மீண்டும் மீண்டும் தேனைச் சேகரிக்கும் தேனீ போல இம்முறையும் விஜய் ஹசாரே தொடரில் இரண்டாவது போட்டியில் சதம் கடந்தார் ஜெகதீசன். தற்போது அது வரிசையாக 5 சதங்களாக மாறியுள்ளது.
ஆந்திர பிரதேஷ், சட்டிஸ்கர், கோவா, ஹரியானா, அருணாச்சல பிரதேஷ் என தமிழகம் வென்ற அனைத்து போட்டிகளிலும் சதம் கடந்து அசத்தியுள்ளார். அதிலும் குறிப்பாக இன்று அருணாச்சலப் பிரதேஷ் அணிக்கு எதிராக அடிக்கப்பட்ட இரட்டை சதத்தின் மூலமாக பற்பல சாதனைகள் அவரின் கீழ் வந்து விழுந்த வண்ணம் உள்ளன.
சாய் சுதர்சனுடன் இவர் முதல் விக்கட்டுக்கு அடித்த 416 ரன்கள்தான் 50 ஓவர் கிரிக்கெட்டில் அமைக்கப்பட்ட அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ஆகும்.
அதேபோல இன்றைய ஆட்டத்தில் 277 ரன்கள் குவித்ததன் மூலமாக 50 ஓவர் இன்னிங்ஸில் அடிக்கப்பட்ட அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் என்ற சாதனையையும் ஜெகதீசன் படைத்தார்.
இப்படி வரிசையாக சாதனைகள் மேல் சாதனைகளைப் படைத்து வந்தாலும் ஜெகதீசனுக்கான கதவு முற்றிலும் திறந்ததாகத் தெரியவில்லை. சீனியர்களான ரோஹித் மற்றும் தவான் ஓய்வின் விளிம்பிலிருந்தாலும் அதன் பிறகு பிரித்வி ஷா, இஷன் கிஷன், ருத்துராஜ் என அந்த இடத்திற்கான போட்டியில் ஒரு பெரும் படையே நிற்கிறது. மீண்டும் தன் முன்பு நிற்கும் கதவுகளை உடைத்துக் கொண்டு ஜெகதீசன் இந்திய அணிக்கு வருவாரா என்பது எல்லாம் தெரியவில்லை.
ஆனால், இன்னும் எத்தனை கதவுகள் மூடிக்கொண்டாலும் அதைத் திறக்க ஜெகதீசன் முயன்றுகொண்டே இருப்பார் என்பதில் துளி அளவும் சந்தேகம் இல்லை.