ஜனாதிபதி பற்றி சர்ச்சை பேச்சு; திரிணாமுல் காங்கிரசுக்கு எதிராக பா.ஜ.க. மெகா பேரணி

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜியின் அமைச்சரவையில் மந்திரியாக இருப்பவர் அகில் கிரி. பா.ஜ.க.வை சேர்ந்த சுவேந்து அதிகாரியின் நந்திகிராம் தொகுதியில் கூடியிருந்த பொதுமக்களின் முன்னால் கூட்டமொன்றில் கலந்து கொண்ட கிரி பேசும்போது, சுவேந்து அதிகாரி எனது தோற்றம் நன்றாக இல்லை என கூறுகிறார். அவர் எவ்வளவு அழகாக இருக்கிறார்…!! என சிரித்து கொண்டே கிரி கூறினார்

ஆனால், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, மக்களின் தோற்றத்தின் அடிப்படையில் அவர்களை எடை போடாது. உங்களது ஜனாதிபதி பதவியை நாங்கள் மதிக்கிறோம். உங்களுடைய ஜனாதிபதி எப்படி தோற்றமளிக்கிறார்? என தலையை சொரிந்து கொண்டே பேசினார்.

அவரது பேச்சை கேட்ட சுற்றியிருந்த மக்களும் ஆரவாரம் எழுப்பினர். சிரிப்பொலியும் எழுந்தது. அவரது இந்த பேச்சுக்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்தது. இதுபற்றி பா.ஜ.க. மூத்த தலைவர் அமித் மாளவியா, மம்தா பானர்ஜி எப்போதும் பழங்குடியினருக்கு எதிரானவர்.

ஜனாதிபதியாக வர திரவுபதி முர்முவுக்கு அவர் ஆதரவு தெரிவிக்கவில்லை. தற்போது இப்படி நடந்து கொள்கின்றனர். வெட்கக்கேடானது என கூறியுள்ளார்.

இதேபோன்று மேற்கு வங்காள பா.ஜ.க. வெளியிட்ட செய்தியில், ஜனாதிபதி திரவுபதி முர்மு பழங்குடி சமூகத்தில் இருந்து வந்தவர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மந்திரியான அகில் கிரி, மகளிர் நலன் துறையை சேர்ந்த மற்றொரு மந்திரியான சஷி பாஞ்சா உடன் இருக்கும்போதே, ஆட்சேபனைக்குரிய வகையில் பேசியிருக்கிறார் என தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில், பா.ஜ.க. எம்.பி.யான சவுமித்ரா கான் தேசிய மகளிர் ஆணையத்துக்கு வேண்டுகோள் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அதில், அகில் கிரியை உடனடியாக கைது செய்யவும், கிரிக்கு எதிராக முறையான நடவடிக்கை எடுக்கவும், எம்.எல்.ஏ. பதவியில் இருந்து அவரை நீக்கவும் முயற்சிக்க வேண்டும் என அவர் தெரிவித்து உள்ளார்.

அவரது இந்த பேச்சுக்கு பா.ஜ.க. தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இதேபோன்று, கொல்கத்தா நகரில் திரிணாமுல் காங்கிரஸ் மந்திரியான அகில் கிரிக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் ஜனாதிபதி திரௌபதி முர்முவின் புகைப்படங்களை சுமந்தபடி, தெருக்களில் பேரணியாகவும் சென்றனர். பா.ஜ.க. எம்.பி. லாக்கட் சாட்டர்ஜி தலைமையில் மெகா பேரணி நடந்தது. இந்த பேரணி மேற்கு வங்காள சட்டசபையில் முடியும் என தெரிவிக்கப்பட்டது.

இன்றைய சட்டசபை கூட்ட தொடரில் கலந்து கொள்ள கிரி வரக்கூடும் என்பதற்காக பேரணி திட்டமிடப்பட்டு உள்ளது.

ஜனாதிபதி திரௌபதி முர்மு குறித்து திரிணாமுல் காங்கிரஸ் மந்திரி அகில் கிரி பயன்படுத்திய மொழி ஏற்று கொள்ள முடியாதது என பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறினார்.

அகில் கிரியை மந்திரி பதவியில் இருந்து நீக்க கோரி, டெல்லியில் ஒரு போலீஸ் நிலையத்தில் பா.ஜ.க. எம்.பி. லாக்கட் சட்டர்ஜி புகார் அளித்துள்ளார்.

எனினும், அகில் கிரியின் சார்பில் மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி மன்னிப்பு கோரினார். எனது கட்சி முன்பே மன்னிப்பு கேட்டு விட்டது என கூறிய மம்தா, ஜனாதிபதி திரவுபதி முர்முவை நான் பெரிதும் மதிக்கிறேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.