அகமதாபாத்: குஜராத் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் இன்று ஒரே நாளில் மோடி, அமித் ஷா, ராகுல், கெஜ்ரிவால் ஆகிய தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொள்கின்றனர். குஜராத் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரம், ஆளும் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி ஆகிய கட்சிகளுக்கு இடையே தீவிரமடைந்துள்ளது. பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தியும், ஆம் ஆத்மி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் இன்று பிரசாரம், பேரணிகளில் பங்கேற்கின்றனர்.
பிரதமர் மோடி சுரேந்திரநகர், ஜபுசார், நவ்சாரி ஆகிய 3 இடங்களிலும், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குஜராத்தின் துவாரகா, சோம்நாத், ஜூனாகத், கட்ச் ஆகிய மாவட்டங்களில் நடக்கும் நான்கு பொதுக் கூட்டங்களிலும் பங்கேற்கின்றனர். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, குஜராத்தில் உள்ள ராஜ்கோட், சூரத் ஆகிய இரு இடங்களில் நடக்கும் பொதுக்கூட்டங்களில் உரையாற்றுகிறார். இமாச்சலப் பிரதேச சட்டப் பேரவை தேர்தல் பிரசாரத்தை தவிர்த்த ராகுல்காந்தி, இன்று முதன்முறையாக குஜராத்தில் பிரசாரம் செய்வதால் பெரும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆம்ஆத்மி வேட்பாளர்களை ஆதரித்து அம்ரேலியில் பிரசாரம் செய்கிறார். இரவு 9 மணிக்கு சூரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் உரையாற்றுகிறார். மோடி உள்ளிட்ட 4 தலைவர்களும் குஜராத்தில் முகாமிட்டுள்ளதால், வரும் டிச. 1ம் தேதி நடைபெறும் முதற்கட்ட தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.