ராஜீவ் காந்தி கொலை கைதிகள் விடுதலை: உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சி மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு…

டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த 6 பேரை கடந்த மாதம் உச்சநீதிமன்றம் விடுதலை செய்த விவகாரம் விவாதங்களை ஏற்படுத்தி உள்ள நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் மறுசீராய்வு மனுத் தாக்கல் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி, விடுதலைப்புலை இயக்கத்தினரால், தமிழ்மண்ணில் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு இந்திய வரலாற்றில், அழியாத வடுவாக பதிவாகி உள்ளது. இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேர் கடந்த 30 ஆண்டுகளுகும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களை விடுதலை செய்ய தமிழகஅரசு தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பிய நிலையில், அவர்  கையெழுத்திடாமல் இழுத்தடித்து வந்ததால், அதை சாதகமாக்கி, உச்சநீ திமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், நீதிமன்றம் முதலில் பேரறிவாளனை விடுதலை செய்து உத்தரவிட்டது. இதை சுட்டிக்காட்டி மற்ற 6 குற்றவாளிகளும் நீதிமன்றத்தில் முறையிட்ட நிலையில், அவர்களையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. விடுதலை செய்யப்பட்lவர்களில், சாந்தன், முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகியோர் இலங்கையை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில்,  உச்சநீதிமன்றத்தில்   தீர்ப்பு கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது.  6பேர் விடுதலையை காங்கிரஸ் கட்சியும் கடுமையாக கண்டித்தது. கொலையாளிகளின் விடுதலை “துரதிர்ஷ்டவசமானது” மற்றும் “ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று தெரிவித்தது. மேலும்,  ஒரு நாட்டின் முன்னாள் பிரதமர் படுகொலைக்கு காரணமாக குற்றவாளிகளை விடுதலை செய்வது, நாட்டுக்கு அவமானம் என்று சமுக வலைதளங்களில் பதிவிடப்பட்டு வந்தது.

இந்த விவகாரம் பெரும் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு தமிழக பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மத்தியஅரசும், உச்சநீதி மன்றத்தில் மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்துள்ளது.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி  சார்பிலும் மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்ய தொண்டர்களும், முக்கியஸ்தர்களும் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து,   6 பேர் விடுதலையை எதிர்த்து  காங்கிரஸ் கட்சி மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது. 6 குற்றவாளகிளும்  விடுதலை செய்யப்பட்ட பத்து நாட்களுக்குப் பிறகு, ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளை விடுவித்ததை எதிர்த்து புதிய மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்போவதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பிடிஐ-க்கு பேட்டியளித்துள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் வழக்கறிஞருமான அபிஷேக் மனு சிங்வி,  “மத்திய அரசின் மறுஆய்வு மனுவுடன் நாங்களும் இணைந்து மனுத்தாக்கல் செய்யலாமா?  அல்லது வேறுவிதமாக தலையிடலாமா என்பது குறித்து நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை” என்று என்றவர்,  இந்த உணர்ச்சிகரமான அரசியல் பிரச்சினையில் பாஜக ஆளும் மத்திய அரசும் காங்கிரஸும் ஒரே பக்கம்தான் உள்ளன என்று தெரிவித்துள்ளார்.

மத்தியஅரசு தாக்கல் செய்துள்ள  சீராய்வு மனுவில், ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகள்  6 பேர் மேல்முறையீடு விவகாரத்தில் மத்திய அரசின் வாதத்தை உச்சநீதிமன்றம்  கேட்க வில்லை. இந்த வழக்கில் இடையீடு செய்யவும் வாய்ப்பு அளிக்கவில்லை. குறிப்பாக விடுவிக்கப்பட்ட 6 பேரில் 4 பேர் இலங்கையை சேர்ந்தவர்களாக இருந்தபோதும் மத்திய அரசின் வாதங்களை முன்வைக்க வாய்ப்பு வழங்கவில்லை என்று நீதிமன்றம் குறை கூறியிருப்பதுடன், இயற்கை நீதி கொள்கைகளை கருத்தில் கொள்ளாமல் இவர்களின் மேல்முறையீட்டு மனுக்கள் முடித்து வைக்கப்பட்டது தவறானதாகும்.

இந்த வழக்கில், பேரறிவாளன் உத்தரவை மட்டுமே கொண்டு 6 பேரையும் விடுதலை செய்தது தவறு. பொது ஒழுங்கு, அமைதி, நாட்டின் குற்ற நீதிமுறை ஆகியவற்றில் எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கு தொடர்பான இந்த மனுவில் மத்திய அரசின் வாதத்தை கேட்டிருக்க வேண்டும். வெளிநாட்டவர்கள் விடுதலை தொடர்பாக எடுக்கப்படும் எந்தவொரு முடிவும் சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும் இந்த விவகாரத்தில் அரசியலமைப்பு சாசனம் 7-வது அட்டவணையின்படி வெளிநாட்டவர்களை விடுதலை செய்ய மத்திய அரசுக்கே அதிகாரம் உள்ளது. மேற்கண்ட வழக்கின் உண்மைத்தன்மையை ஆராயாமல் 6 பேரையும் விடுவித்த உத்தரவு மறுஆய்வு செய்ய தகுதியுடையது. எனவே நவம்பர் 11-ந்தேதி பிறப்பித்த தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.