ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகர் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், படங்கள் நடிப்பதிலிருந்து தற்காலிகமாக ஓய்வு எடுக்கப்போவதாக அறிவித்துள்ளார். கிறிஸ், மார்வெல் உலகத்துக்குள் ‘Thor’ என்னும் சூப்பர்ஹீரோவாக வந்த ஆண்டு 2011. இந்த 11 ஆண்டுகளில் 8 மார்வெல் படங்களில் தோராக நடித்துள்ளார். அது தவிர எண்ணற்ற படங்களில் நாயகனாகவும் நடித்துள்ளார். ஹாலிவுட் நடிகை எல்சா படக்கியைத் திருமணம் செய்து கொண்ட இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. 39 வயதான கிறிஸ் ஹேம்ஸ்வொர்த் சமீபத்தில் தனக்கு அல்சைமர் எனப்படும் மறதி நோய்ப் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாகத் தெரிவித்து இருந்தார்.
இதன் காரணமாக சினிமாவிலிருந்து தற்காலிகமாக ஓய்வு எடுக்கப்போவதாக தற்போது அறிவித்திருக்கிறார். இது குறித்து அவர் பேசும் போது, “என் தாத்தாவிற்கும் இந்த அல்சைமர் பாதிப்பு இருந்தது. அதனால் எனக்கும் இந்தப் பிரச்னை இருப்பதில் ஆச்சர்யம் இல்லை. எனவே சிறிது காலம் சினிமாவிலிருந்து விலகி மனைவி, குழந்தைகளுடன் நேரத்தைக் கழிக்க விரும்புகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.
இவரின் இந்த ஓய்வு முடிவு, ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மீண்டு வாங்க தோர்!