உலகப்பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இந்த ஆண்டு மண்டல மற்றும் அகர விளக்கு பூஜைக்காக கடந்த 16 ஆம் தேதி மாலை திறக்கப்பட்டது. சபரிமலை நடைதிறப்பை முன்னிட்டு 13,000 போலீசார் ஆறு கட்டங்களாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தற்போது “வெர்ச்சுவல் கியூ” மூலம் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு தரிசன அனுமதி வழங்கப்படுகிறது. இதன் 6-வது நாளான நேற்று தந்திரி கண்டரரு ராஜீவரு மற்றும் மேல் சாந்தி ஜெயராமன் நம்பூதிரி தலைமையில் சன்னிதானத்தில் ஐயப்பனுக்கு விசேஷ பூஜைகளில் ஒன்றான களப பூஜை, களபம் சார்த்தல், களப அபிஷேகம் நடைபெற்றன.
இதற்கிடையில் மாலை 4 மணிக்கு நடை மீண்டும் திறக்கப்பட்டதை அடுத்து பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். அதன்படி ஐயப்பனை தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், 6 நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியது.
இந்நிலையில், பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில், இன்று முதல் சாமி தரிசனம் செய்ய கூடுதலாக ஒரு மணிநேரம் அனுமதி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 3 மணிக்கு திறக்கப்படும் நடை மதியம் ஒரு மணிக்கு அடைக்கப்பட்டு, மாலை 4 மணிக்கு பதிலாக ஒரு மணி நேரம் முன்பாக மூன்று மணிக்கு நடை திறக்கப்படும் . வழக்கம்போல இரவு 11 மணிக்கு அடைக்கப்படும் என திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தெரிவித்துள்ளது.
வழக்கமாக அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும். பின் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.
இந்த ஆண்டு மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காலத்தில் பத்தர்கள் வருகை அதிகரிப்பை தொடர்ந்து, ஏற்கனவே அதிகாலை 4 மணிக்கு பதில் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் ஒரு மணிக்கு நடை அடைக்கப்பட்டது. பின் நான்கு மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 10 மணிக்குப் பதில் இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.