பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயி சிவகுமார் தன்னுடைய குடும்பத்துடன் அறநாரை தெருவில் வசித்து வந்துள்ளார். அவரது வீட்டில் செல்லமாக ஒரு பூனை வளர்த்து வந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தில் தனது குடும்பத்துடன் அவர் தொலைக்காட்சி பார்த்து பொழுது போக்கிக் கொண்டிருந்தார்.
அப்போது காலை நேரத்தில் ஒரு பாம்பு வீட்டுக்குள் நுழைய முயன்றது. இந்த பாம்பை பார்த்த வளர்ப்பு பூனை அந்த பாம்புடன் சேர்ந்து கடுமையாக சண்டை போட்டது. அப்போது பூனையின் சீறல் சத்தத்தை கேட்டு குடும்பத்தினர் வீட்டிற்கு வெளியில் வந்து பார்க்க போது பேரதிர்ச்சிக்கு உள்ளாகினர்.
வெகுநேரமாக பூனையும், பாம்பும் சண்டை போட்டுக் கொண்டிருந்த நிலையில் பூனை பாம்பின் தலையை கவ்வி பிடித்து கடித்து குதறி கொன்றது. பாம்பு இறந்த பின்னர் அருகில் சென்று வீட்டினர் பார்த்த போது அது கடுமையான விஷம் கொண்ட கட்டி விரியன் பாம்பு வகையை சேர்ந்தது என்று தெரியவந்துள்ளது.
வீட்டிற்குள் நுழைந்து உரிமையாளர்களை ஒரு வேளை பாம்பு தீண்டி இருந்தால் அவர்கள் உயிரிழந்திருக்க நேரிடும். ஆனால், வளர்ப்பு பூனை அவர்களை காக்க பாம்புடன் சண்டையிட்டு குடும்பத்தினரின் உயிரை காப்பாற்றியது அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.