1. பெல்ஜியம் அணி வீரரான கெவின் டி புருய்னின் டி-ஷர்ட்டின் காலரில் ‘Love’ என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது. இந்த தகவல் வெளியான 24 மணி நேரத்திற்குள், காலரில் ‘லவ்’ என்று எழுதப்பட்ட டி-ஷர்ட் அணிந்து ஆட்டத்தில் ஆடக்கூடாது என்று FIFA தெரிவித்துள்ளது. மேலும், இது போன்று விதியை மீறி செயல்படும் வீரர்களுக்கு தண்டனை விதிக்கப்படும் என்றும் FIFA எச்சரித்துள்ளது.
2. போட்டியைப் பற்றி நேரலையில் பேசிக் கொண்டிருந்த அர்ஜென்டினா நாட்டு பெண் நிருபர் டாமினிக் மெட்ஜ்கர், கைப்பை (hand bag) திருடப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளார். காவல் நிலையத்தில் பதிலளித்த அதிகாரி, நிருபரிடம் ‘உங்களுக்கு என்ன மாதிரியான நீதி வேண்டும்? அந்த நபருக்கு நாங்கள் என்ன தண்டனை கொடுக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்? அந்த நபரை 5 ஆண்டுகள் சிறையில் தள்ள நீங்கள் விரும்புகிறீர்களா? அவரை நாடு கடத்த விரும்புகிறீர்களா?’ என கேட்டு வியப்படையச் செய்துள்ளனர்.
3. கால்பந்து தொடரில் ஈரான் – இங்கிலாந்து அணிகள் மோதிய ஆட்டத்தில், ஈரான் நாட்டின் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது அந்நாட்டு வீரர்கள் யாரும் தேசிய கீதத்தை பாடவில்லை. ஈரான் வீரர்கள் அனைவரும் தங்கள் வாயை அசைக்காமல் அப்படியே நின்றனர். ஈரான் நாட்டில் அரசுக்கு எதிராக நடந்து வரும் ஹிஜாப் போராட்டத்திற்கு ஆதரவாக செயல்படும் வகையில் இவ்வாறு செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
4. போட்டியில் கோல் அடித்த பின்னர் அணி வீரர்கள் நடனம் ஆடுவது பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகும் சூழலில், ‘உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் ஒவ்வொரு ஆட்டத்திற்கும் எங்களிடம் 10 நடனங்கள் தயாராக உள்ளன.’ என பிரேசில் அணியின் வீரர் ரஃபின்ஹா தெரிவித்துள்ளார். ‘ஒவ்வொரு கோலுக்கும் ஒவ்வொரு நடனம் தயார் செய்துள்ளோம்’ என தெரிவித்துள்ளார்.
5. கத்தார் அரசு உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் போது மைதானத்தில் பீர் அருந்த தடைவிதித்துள்ளது. இதனைத் தொடர்ந்து உலகக்கோப்பையின் அதிகாரப்பூர்வ விளம்பரதாரரான பீர் தயாரிப்பு நிறுவனமான (Budweiser) பட்வைசர் ட்விட்டரில், உலகக் கோப்பையை வெல்லும் அணிக்கு, இந்த தொடருக்காக தயாரிக்கப்பட்ட பீர்கள் அனைத்தும் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.