வரவு செலவு திட்டத்திற்கு ,அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும்

திருத்தங்களுக்கு உட்பட்ட வரவு செலவு திட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ச பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (22)  விசேட அறிக்கை ஒன்றை விடுத்து அவர் மேலும் தெரிவிக்கையில், பிரச்சினை சவால்களை எதிர்கொள்ளும் கொள்கைக்கு அப்பால் எந்தவகையிலும் பொது மக்களை கைவிட்டு தாம் தப்பி போவதில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி நிதியமைச்சர் என்ற ரீதியில் புதிய பொருளாதாரத்தை உருவாக்குவதாக வரவு செலவு திட்டத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறான பொருளாதாரத்தை உருவாக்குவதற்கு நாம் செய்ய வேண்டிய நீண்ட காலம் மற்றும் குறுகிய கால நடவடிக்கைகள் பல உண்டு.

நாம் அனைவரும் இதனை புரிந்து கொள்ள வேண்டும் உலகளாவிய பொருளாதாரம் மற்றும் அரசியல் யதார்த்தத்துடன் தெளிவுப்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறான மூலோபாய திட்டங்களுடன் நாம் செயற்பட்டால் மாத்திரமே சுபீட்சமான எதிர்காலத்தை உருவாக்க முடியும். இதன் காரணமாக திருத்தங்களுக்கு அமைவாக அனைவரும் ஒத்துழைப்பு வழங்குவது மிகவும் முக்கியமானதாகும்.

நல்லாட்சி அரசாங்கம் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு கடனை பெற்றது. இந்த விடயம் நாட்டுக்கும் இந்த சபைக்கும் இரகசியமான ஒன்றல்ல. இன்று நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக கருத்துக்களை முன்வைத்த சிலர் அன்று அவ்வரசாங்கத்தில் இருந்தனர். பொறுப்புகளை ஏற்று செயல்படுமாறு கூறும் பொழுது அதற்கு முடியாது என்று கூறுகின்றனர். இவ்வாறானோர் எப்பொழுதும் புகழ் மிக்கவர் தரப்பில் இருந்தனர். பிரச்சனை சவால்களை எதிர்கொள்வதே எமது கொள்கை ஆகும். இதன் காரணமாக நாம் எந்த சந்தர்ப்பத்திலும் மக்களை விட்டு தப்பி ஓடுவது இல்லை. அவ்வாறு செல்லவும் மாட்டோம். நாம் பாரிய கடன் சுமைக்கு மத்தியிலேயே அரசாங்கத்தை பொறுப்பேற்றோம். அப்படி பொறுப்பேற்று இன்று வரையில் நாடு முன்னோக்கி செல்வதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்கியுள்ளோம். எதிர்காலத்திலும் இதில் எந்த மாற்றமும் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.