சபரிமலை சன்னிதானம் திருமுற்றத்தில் ஐயப்ப பக்தர்களுக்கான அவசர சிகிச்சை மையம் துவக்கப்பட்டுள்ளது.
படிக்கட்டுகளில் ஏறும் பக்தர்களுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அவர்களுக்கு அவசர சிகிச்சை அளிப்பதை நோக்கமாக கொண்டு இந்த அவசர சிகிச்சை மையம் செயல்படுகிறது.
சபரிமலை கோயில் தந்திரி கண்டரரு ராஜீவரு தீபம் ஏற்றி மையத்தை திறந்து வைத்தார். மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி, தேவஸ்வம் போர்டு செயல் அலுவலர் கிருஷ்ணகுமார், செயலாளர் மற்றும் பொது அறுவை சிகிச்சை நிபுணர். ஓ.வாசுதேவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரு, மேல்சாந்தி ஜெயராமன் ஆகியோருக்கு நடத்திய பரிசோதனையோடு அவசர சிகிச்சை மையம் இயங்கக் துவங்கியது. 18ம் படி ஏறியவுடன் நெஞ்சுவலி, மூச்சுத் திணறல், சோர்வு போன்றவற்றை எதிர்கொள்ளும் பக்தர்கள் இங்கு சிகிச்சை பெறலாம். இரத்த அழுத்தம், ஆக்ஸிஜன் அளவு மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட பக்தர்களுக்கு இங்கு அவசர முதலுதவி அளிக்கப்படுகிறது.
தேவைப்பட்டால் வேறு மருத்துவமனைகளுக்கு மேல் சிகிச்சைக்காக பக்தர்களை மாற்றவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுழற்சி முறையில் டாக்டர் மற்றும் செவிலியர்கள் பணியமர்த்தம் செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக சபரிமலையில் தொடர்ந்து பக்தர்கள் வருகை அதிகரித்து வருவதால், இன்று முதல் (22.11.22) அதிகாலை 3 மணிக்கு திறக்கப்படும் நடை, மதியம் 1 மணிக்கு அடைக்கப்பட்டு, பின் மாலை 4 மணிக்கு பதிலாக ஒரு மணி நேரம் முன்பாக 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்படும் என திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தெரிவித்துள்ளது. பக்தர்களுக்காக நடைதிறப்பு நேரத்தை அதிகரித்திருப்பது, அவசர சிகிச்சை மையத்தை அமைத்திருப்பது என தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது தேவஸ்வம். இந்த முயற்சிகளுக்கு, பக்தர்களும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM