ஒரு மனிதர், எத்தனை உயரங்கள் போனாலும், தன் தாயின் கண்களுக்குக் குழந்தையாகத் தான் தெரிவார்களாம். அப்படியே சினிமா மற்றும் இதர துறைகளில் தன்னிகரற்று சாதனை புரிந்த பிரபலங்களின் தாய்கள் தங்களது தவப்புதல்வர்கள் பற்றிக் கூறும் சுவாரசியமான தகவல்கள், இளமையில் அவர்கள் செய்த குறும்புகள் என கலகலப்பாகப் பேசுகிறார்கள். படிக்கப் படிக்க ‘இவரா சின்ன வயசுல இப்படி?’னு கேட்கத் தோன்றுகிறது. ஆக உங்களுக்குப் பிடித்த பிரபலங்களின் இளமைப் பருவத்தை பச்சைப்பசேல் என படம்பிடித்துக் காட்டுகிறது இந்தத் தொடர்.
“இந்திரா காந்தி பிறந்த நாள் அன்னிக்குத் தான் விவேக் பிறந்தான். ‘தேசியத் தலைவர் பிறந்த நாள்ல பிறந்திருக்கேடா குட்டிப் பயலே… ஜனங்க மனசுல நிக்கிற மாதிரி பெரிசா எதையாவது செய்யணும் தெரியுமா?’னு அவன் பிறந்தவுடனே அவன் காதுல சொன்னேன். ‘சரிம்மா’ன்னு சொல்ற மாதிரி கையையும் காலையும் ஆட்டிச்சு குழந்தை! விவேக்கோட முழுப்பெயர் விவேகானந்தன். வீட்ல செல்லப் பேரு ராஜு. ராஜா போல நம்ம மகன் இந்த மண்ணையே கட்டி ஆளணும்னு எல்லா அம்மாவும் ஆசைப்படற மாதிரி ஆசையா வெச்ச பேரு அது . வெச்ச பேருக்குக் குறைச்சலில்லாம இப்போ எல்லோர் மனசையும் கட்டி ஆள்றானே… அதுவே சந்தோஷம்!
அப்போ நாங்க திருநெல்வேலியில் குடியிருந்தோம். ராஜூ அப்பாவுக்கு (அங்கய்யா) கல்வித்துறையில உத்தியோகம். அடிக்கடி சட்டி பானையைத் தூக்கிட்டு ஊர் ஊரா ஓடனும் அதனால பல நல்ல விஷயங்களும் கிடைச்சது. அவருக்கு குன்னூருக்கு மாத்தலானப்போ விவேக் ஊட்டி கான்வென்ட்ல படிச்சான். இங்கிலீஷ் எல்லாம் அப்பவே பிச்சு உதறுவான். நாலாவது படிக்கிறப்பவே இங்கிலீஷ்ல ஒரு லெட்டர் எழுதி தனக்கு ரொம்பப் பிடிச்ச இந்திரா காந்திக்கு அனுப்பினான். அப்போ அந்தம்மாதான் பிரதமர். உடனே அவங்க ஒரு பதில் லெட்டரும் போட்டாங்க இன்னமும் அந்த லெட்டரை ஃபிரேம் போட்டு பத்திரமா வீட்ல மாட்டி வெச்சிருக்கான். சின்ன வயசுல ராஜூ எங்கேயாவது வெளியே விளையாடப் போனா, அவனைத் தேடி நான் அதிகமா கஷ்டப்பட வேண்டியதில்லை. தெருவில எங்கேயாவது நிறைய பசங்க சிரிச்சுட்டே நின்னாங்கன்னா, மத்தியில நிச்சயம் ராஜு இருக்கிறான்னு அர்த்தம். எதையாவது சிரிக்கச் சிரிக்கப் பேசிட்டே இருப்பான். அல்லது கதை சொல்லிட்டு இருப்பான். அல்லது சினிமா நடிகர்கள், அரசியல்வாதிகள் மாதிரி மிமிக்ரி செஞ்சு காட்டிட்டிருப்பான். நாலாவது வகுப்பு படிக்கும்போது கதையெல்லாம் எழுதுவான். இவன் எழுதின முதல் கதைகூட ஞாபகம் இருக்கு…. காட்டுக்குள்ளே ஒருத்தன் வேட்டையாடப் போவான். அவனைத் துரத்திட்டு ஒரு புலி வரும். அவன் பயந்து ஓடு ஓடுன்னு ஓடறான். இருட்டிட்டு வர்றப்போ அவன் மரத்து மேல ஏறிடுவான். புலிக்கு இருட்டுல கண்ணு தெரியலே. அதனால மரம் ஏற முடியலே. அவனும் தப்பிச்சான்னு கதை முடியும். கதையை என்கிட்டத்தான் வாசிக்கத் தந்தான். குட்டியூண்டு பய என்ன அழகா கதை எழுதியிருக்கான்னு எனக்குப் பெருமையான பெருமை. ‘இருட்டுல புலிக்கு கண்ணு தெரியாதுன்னு எழுதியிருக்கியே’னு கேட்டேன்.
‘ஓ… கண்ணு தெரியுமா? சரி.. மாத்திடறேன் குடு’ன்னு புலிகிட்டேர்ந்து அந்த மனுஷன் வேற மாதிரி தப்பிக்கிறதா மாத்திட்டான். இன்னமும்கூட இவன் எழுதற நகைச்சுவைக்கோ, டயலாக்குகளுக்கோ இவன் நடிக்கிற படங்களுக்கோ நான்தான் முதல் ரசிகை. நானும் இவனுமே அம்மா – பையன் மாதிரி இல்லாம. ஜாலியா ஃப்ரெண்ட்ஸ் மாதிரியே அரட்டை அடிச்சுட்டிருப்போம். இவங்கப்பா வேலையில பிஸியா இருந்ததால இவனுக்கு எப்பவுமே என்கூட ஒட்டுதல் அதிகம் எனக்குக் கதை சொல்லிட்டே வீட்டு வேலைகள்லாம் கூட செஞ்சு கொடுப்பான். அல்லது அவனுக்கு நான் கதை சொல்லணும். எங்க வீட்ல ராஜூதான் கடைசி. இவனோட மூத்த அக்கா விஜயலட்சுமி டாக்டருக்குப் படிச்சா. சின்னவ சாந்தி சட்டம் படிச்சா. இவனுக்கும் இயல்பாவே படிப்பு நல்லா வந்தது. டாக்டருக்குப் படிக்கனும்னு தான் முதல்ல ஆசைப்பட்டான். அப்புறம் என்ன தோணுச்சோ… மதுரை அமெரிக்கன் காலேஜ்ல பி.காம் படிச்சான். காலேஜ் படிக்கும்போது படிப்பு சரியா வராத பசங்களை விட்டுக்குக் கூட்டிட்டு வந்து அவங்களுக்குப் புரியற மாதிரி பொறுமையா கிளாஸ் எடுப்பான். இவன் சொல்லித்தர்ற அழகைப் பார்த்துட்டு, சரி. இவன் காலேஜ் புரொபசராகத்தான் வேலை பார்ப்பான்னு நெனச்சேன். இவன் நெனச்சபடி டாக்டராவும் ஆகலே. நான் எதிர்பார்த்தபடி புரொபசராகவும் ஆகலே. கடைசியில சட்டம் படிச்சுட்டு சினிமா நடிகனா ஆயிட்டான்.
ராஜு…
அதான், விவேக் ஒரு நல்ல பரத நாட்டிய கலைஞர்னு நிறைய பேருக்குத் தெரியாது. சின்ன வயசிலிருந்தே முறைப்படி பரதநாட்டியம் கத்துக்கிட்டவன். அவனும் அவங்க அக்கா விஜியும் மேடைகள்லகூட ஆடியிருக்காங்க. நம்ம பையன் டான்ஸ்ல தனஞ்ஜெயன் மாதிரியும், மியூஸிக்ல இளையராஜா மாதிரியும் பேரு வாங்கப் போறான்னுகூட எனக்குக் கனவெல்லாம் இருந்துச்சு மியூஸிக் மேல அப்படியொரு காதல், அருமையா பாடுவான். ஹார்மோனியம் ரொம்ப நல்லா வாசிப்பான். வயலின், பியானோ, தபேலா எல்லாமே நல்லா வாசிக்கத் தெரியும். இனிமையா புல்புல்தாரா வாசிச்சு எல்லோரையும் தூங்க வைப்பான். நேயர் விருப்பம் மாதிரி மாத்தி மாத்தி பாட்டு வாசிக்கச் சொல்வோம். ரொம்பப் பொறுமையா வாசிப்பான். கடைசியாத் தான் தூங்கப் போவான். மதுரையில் பரதநாட்டிய போட்டி நடந்தப்போ நல்லா ஆடி இவன்தான் முதல் வாங்கினான். அப்போ பி.காம். முடிச்சுட்டு மதுரை தபால் தந்தி அலுவலகத்தில் வேலை பார்த்துட்டிருந்தான். ஒவ்வொரு மாவட்டத்திலேயும் பரத நாட்டியத்தில் முதல் பரிசு வாங்கினவங்களுக்கு சென்னையில் இறுதிப் போட்டி நடந்தது.
அங்கதான் இவனுக்கு முதன்முதலா கலாகேந்திரா கோவிந்தராஜன் மூலம் பாலசந்தரோட அறிமுகம் கிடைச்சது. இவன் நடனமும் மிமிக்ரியும் பாலசந்தருக்கு ரொம்பப் பிடிச்சுப் போய்த்தான் தன்னோட ‘மனதில் உறுதி வேண்டும்’ படத்தில் நடிக்க இவனுக்குச் சந்தர்ப்பம் தந்தார். அப்புறம் இவனுக்கு சென்னைத் தலைமைச் செயலகத்திலேயே வேலை கிடைக்க இங்க வந்துட்டோம்.
கோடம்பாக்கத்தில் ஒரு சின்ன ஃப்ளாட்லதான் குடியிருந்தோம். இவன் நடிச்சுட்டே எல்லாப் பத்திரிகைகளுக்கும் காமெடி துணுக்குகள், கட்டூரைகள் நிறைய எழுதுவான். விகடன்ல இவன் ஜோக்ஸ் நிறைய வந்திருக்கு.
எனக்கு ராஜுவை பார்க்கிறப்போ எங்கப்பா சுவாமிதாஸ் தேவரையே நேர்ல பார்க்கிறது மாதிரி இருக்கும் வாத்தியாரா இருந்தார் அவர். எங்கப்பாதான் சங்கரன் கோவில் பெருங்கோட்டுர் கிராமத்து, திருவிழாக்கள்ல எல்லா நாடகம் போடுவார். அவரே எழுதி, அவரே நடிச்சு, அவரே இசையமைச்சு இயக்குவார் ஆடுவார்… பாடுவார். அந்த ‘ஜீன்’தான் மதுரை அமெரிக்கன் காலேஜ்ல ராஜூ படிச்சப்பவும் இவனே நாடகம் எழுதி, நடிச்சு இசையமைச்சு, இயக்கவும் தூண்டுச்சு போல…
நடனமும் இசையும் கத்துக்கத் தூண்டுச்சு போல! காமெடி இவனுக்குள்ளே இயல்பாவே இருந்ததாலேயோ என்னவோ… இவன் நடிச்ச படங்களைப் பார்க்கிறப்போ, எனக்கு நடிப்பை மறந்துட்டு நிஜமாவே இவனைப் பார்த்த மாதிரி இருக்கும். படத்தில நீங்க பார்க்கிற அதே விவேக்தான் அப்படியே வீட்லயும்! இவனுக்கு ஆறு வயசு இருக்கப்போ நடந்த ஒரு சம்பவம் ஞாபகத்துக்கு வருது. ரொம்ப சொந்தக்காரர் ஒருத்தர் இறந்துட்டார். அந்த வீடே ரெண்டு நாளா பயங்கர இறுக்கத்தில் இருந்துச்சு… முக்கியமான விஷயத்தைக்கூட ஜாடையில பேசிட்டிருந்தோம். அப்போ பந்தியில சாப்பிட உட்கார்ந்திருந்தவங்களுக்கு இட்லி பரிமாறிட்டு இருந்தாங்க.
சட்னி ஊத்த கொஞ்சம் லேட்டாகிடுச்சு. பந்தியில் உட்கார்ந்திருந்த இவனுக்கோ பசி வயித்தைக் கிள்ளியிருக்கு. ‘சித்தி, சட்டினி போடுறியா… பட்டினி போடுறியா’னு இவன் சத்தமா தன் சித்தியைக் கூப்பிடவும், வீடு மொத்தமும் இவனைத் திரும்பிப் பார்த்துச்சு. ரிதமாடிக்கா குழந்தை சட்னி கேட்டதைப் பார்த்துப், பலருக்கு ஒரே சிரிப்பு, இறுக்கமான அந்த மெளனம் அப்பத்தான் உடைஞ்சது.
அதுக்கப்புறம்தான் எல்லோரும் ஒருத்தரோட ஒருத்தர் பேசவே ஆரம்பிச்சாங்க. சின்ன வயசுல இருந்தே ராஜூ என்னைவிட்டுப் பிரிஞ்சு இருக்கமாட் டான். எங்க சுத்தினாலும் சாயங்காலம் அம்மான்னு வந்து என் முந்தானையைப் பிடிச்சுட்டாதான், நிம்மதியா இவனுக்குத் தூக்கம் வரும். ‘அப்படியிருக்கிறப்போ ஏன் நீங்க ஒரு இடத்திலேயும் உங்க பையன் ஒரு இடத்திலேயுமா தனித்தனியா குடியிருக்கீங்க?’ன்னு சிலர் கேட்கிறாங்க.
காரணம் நான்தான். வடபழனி முருகனை அடிக்கடி தரிசிச்சுக்கிட்டே இருக்கணும்னு பிடிவாதமா கோயிலுக்குப் பக்கத்திலேயே ஒரு விடு பார்த்துக் குடியிருக்கேன் நான். ராஜூ, அவன் குழந்தை அமிர்தா நந்தினியோட பள்ளிக்கூட வசதிக்காக கே.கே.நகர்ல குடியிருக்கான். கோயிலுக்குப் போற நேரம் தவிர, மிச்ச நேரத்தில் கம்ப்யூட்டர் கிளாஸ் போயிட்டிருக்கேன். காலம் பூரா கத்துக்கிட்டே இருக்கணும்கறது என் எண்ணம். நான் கம்ப்யூட்டர் படிக்கிறதில் ராஜூக்கு ரொம்பப் பெருமை! ‘எனக்குக்கூட இடையிடையில் லீவு கிடைக்குது. நீ லீவே இல்லாம பிஸியா இருக்கேம்மா’னு ராஜூ கேலி பண்ணுவான்.
ராஜூ ஒருவேளை யாரையாவது காதலிச்சால், அவன் காதலிச்ச பொண்ணையே அவனுக்கு கல்யாணம் பண்ணி வெச்சுடனும்கிற அளவுக்கு நான் முற்போக்குள்ள அம்மாவா, ரெடியாத்தான் இருந்தேன். ஆனா. அவனுக்கு அதிலெல்லாம் ஆர்வம் இல்லை போலிருக்கு என் சின்னப் பொண்னோட மாப்பிள்ளைதான் அருட்செல்விங்கிற அருமையான பொண்ணைப் பார்த்து இவனுக்கு கல்யாணம் பேசி முடிச்சார். அமிர்தா நந்தினி, தேஜஸ்வினின்னு ரெண்டு குழந்தைங்க ரெண்டு பேருக்குமே அவங்கப்பா மாதிரியே இசையில் பயங்கர ஆர்வம். அடுத்து பேரன் எப்போ பிறப்பான்னுதான் எதிர்பார்த்திட்டிருக்கேன். இன்னமும் பல படங்கள்ல இவன் காலேஜ் போயிட்டுத்தான் இருக்கான். ஏண்டா. எவ்வளவு வருஷம்தான் காலேஜ் போய் படிப்பே. காலேஜ் லெக்சரராவாவது பிரமோஷன் வாங்கிக்கக்கூடாதானு கேட்பேன். ‘அதை ஏம்மா கேக்கறே. என் சீனியரான முரளிக்கே இன்னும் லெக்சரர் பிரமோஷன் கிடைக்கலே. அதுக்குள்ள எனக்கு எப்படிக் கிடைக்கும்’னு சிரிப்பான். ‘உங்க பையன் காமெடியனாவே நடிக்கிறாரே… ஹீரோவாக வேண்டாமா?’னு சிலர் எங்கிட்டே கேட்பாங்க. ஹீரோக்களை ஒரு சிலருக்குப் பிடிக்கும், சிலருக்குப் பிடிக்காது. ஆனா, காமெடி நடிகரை எல்லோருக்குமே பிடிக்கும். என் பையன் இப்போ மாதிரியே எப்பவும் எல்லோரும் விரும்பற மனிதனா இருக்கணும்ங்கிறதுதான் என் ஆசை!”
– விகடன் டீம்