பெங்களூரு: பெற்ற குழந்தைகளைப் போல கருணை அடிப்படையில் பெற்றோர்களின் வேலையினை பெற தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கும் உரிமை உண்டு என்று கர்நாடகா உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் பெற்ற குழந்தை தத்துக்குழந்தை என்று வேற்றுமை கடைபிடித்தால் ஒரு குழந்தையைத் தத்தெடுத்ததற்கான அர்த்தமே இல்லாமல் போய் விடும் என்றும் கூறியுள்ளது.
மறைந்த தந்தையின் வேலையை கருணையின் அடிப்படையில் தனக்கு வழங்க வேண்டும் என்று தத்துப்பிள்ளை ஒருவர் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவினை விசாரணை செய்த கர்நாடகா உயர் நீதிமன்ற டிவிசன் பெஞ்ச், “ஒரு மகன், மகள் அவர்கள் சொந்தப் பிள்ளையாக இருந்தாலும், தத்தெடுக்கப்பட்டவர்களாக இருந்தாலும் பெற்றோர்களுக்கு அவர்கள் பிள்ளைகளே. இதில் சொந்த பிள்ளை, தத்தெடுக்கப்பட்ட பிள்ளை என்ற வேறுபாடு காட்டினால் ஒரு குழந்தையை தத்தெடுப்பதற்கான எந்த அர்த்தமும் இல்லாமல் போய்விடும். இது அரசியலமைப்பு பிரிவு 14 – ஐ மீறும் செயலாக இருக்கும் என்பதால் செயற்கையாக பாரபட்சம் காட்டும் விதி மாற்றியமைக்க்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.
விநாயக் எம் முட்டாட்டி என்பவர் கர்நாடகா மாநிலம் பனாஹத்தியில் உள்ள ஜேஎம்எஃப்சியில் உள்ள உதவி அரசு வழக்கறிஞர் அலுவலகத்தில் நான்காம் நிலை ஊழியராக பணிபுரிந்துவந்தார். அவர் கடந்த 2011 ஆம் ஆண்டு முறைப்படி ஒரு மகனை தத்தெடுத்துக்கொண்டார். இந்த நிலையில் முட்டாட்டி கடந்த 2018ம் ஆண்டு மரணமடைந்தார். அதே வருடம் கருணையின் அடிப்படையில் தனது தந்தையின் வேலையைத் தனக்கு தரவேண்டும் என்று கோரி முட்டாட்டியின் தத்துப்பிள்ளையான கிரிஷ் விண்ணப்பம் செய்திருந்தார்.
அதற்கு, சம்மந்தப்பட்ட துறை கருணையின் அடிப்படையில் தந்தையின் வேலையினை தத்துப்பிள்ளைகளுக்கு வழங்க விதிகளில் இடம் இல்லை என்று கூறி கிரிஷின் கோரிக்கையை நிராகரித்தது.
இதனை எதிர்த்து கிரிஷ் கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். கடந்த 2021ம் ஆண்டு தனிநீதிபதி அமர்வு கருணையின் அடிப்படையில் தந்தையின் வேலையை தத்துப்பிள்ளைக்கு வழங்க விதிகள் அனுமதிக்கவில்லை என்று கூறி கிரிஷின் மனுவினைத் தள்ளுபடி செய்தது.
இந்தநிலையில் தனிநீதிபதியின் தீர்ப்பினை எதிர்த்து கிரிஷ் உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்சில் மேல் முறையீடு செய்திருந்தார். இதற்கியிடையில், கடந்த 2021 ம் ஆண்டு ஏப்ரலில் தந்தையின் வேலையைப் பெறுவதில் பெற்றக்குழந்தை, தத்துக்குழந்தைக்கும் இடையில் உள்ள பாரபட்சம் நீக்கப்பட்டு விதிகள் மாற்றப்பட்டன.
இந்த நிலையில், கிரிஷ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் சூரஜ் கோவிந்தராஜ், ஜி.பசவராஜா அடங்கிய அமர்வு விசாரணை செய்தது. அப்போது கிரிஷின் சார்பில், கடந்த 2021ம் ஆண்டு அரசு விதிகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம் தனிநீதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. அரசு தரப்பு வழக்கறிஞர், விதிகளில் திருத்தம் 2021ல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் கிரிஷ் 2018ம் ஆண்டே விண்ணப்பித்துள்ளார். அதனால் திருத்தப்பட்ட விதிகளின் பலனை அவருக்கு வழங்க முடியாது என்று தெரிவித்தார்.
இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், ஒரு குடும்பத்தில் வருமானம் ஈட்டும் நபரின் மறைவை ஒட்டி அந்த குடும்பம் நிதிநெருக்கடி மற்றும் பிற பிரச்சினைகளை சந்திக்கும் போது தான கருணை அடிப்படையில் வேலை என்ற நிலை உருவாகிறது. தற்போதைய வழக்கில், இறந்த நபருக்கு மனைவி, மகன், தத்துமகன் மற்றும் மாற்றுத்திறனாளியான ஒரு மகள் இருக்கிறார்கள். இந்த வழக்கில், இறந்தவரின் மகள் சொந்தப்பிள்ளை அவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக, மாற்றுத்திறனாளியாக இல்லாத பட்சத்தில் இயற்கையாக தந்தையின் வேலை மகளுக்கு கருணையின் அடிப்படையில் வழங்கப்பட்டிருக்கும். இந்தநிலையில் சொந்த மகனும் இறந்து விட்டநிலையில்,குடும்பத்தினை காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் உள்ள தத்துமகன் கருணை அடிப்படையில் வேலை கேட்டு விண்ணப்பித்துள்ளார்.
கருணையின் அடிப்படையில் தந்தையின் வேலை கேட்டு விண்ணப்பத்துள்ள மனுதாரரின் விண்ணப்பம் நேர்மையானது. அந்த குடும்பம் சந்திக்கும் நிதி நெருக்கடியை கருத்தில் கொண்டு இதனை நாம் அணுக வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம். எனவே வேலைக்காக விண்ணப்பிக்கப்பட்ட போது இருந்த விதிகளின் படி மனுதாரரின் கோரிக்கையினை பரிசீலிக்க வேண்டும்.
மேலும் கருணையின் அடிப்படையில் வேலை கேட்டு மனுதாரர் சமர்பித்துள்ள ஆவணங்களை பெற்ற பிள்ளை தத்துப்பிள்ளை என்ற பாரபட்சம் காட்டாமல், விண்ணப்பதாரரை இறந்தவரின் சொந்த மகனாக கருத வேண்டும் என்று சம்மந்தப்பட்ட துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.