கப்பலூர் சுங்கச் சாவடியை அகற்றக்கோரி, திருமங்கலத்தில் இன்று வணிகர்கள் கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே மதுரை – விருதுநகர் தேசிய நெடுஞ்சாலையில் கப்பலூர் சுங்கச்சாவடி செயல்பட்டு வருகிறது. விதிகளின்படி திருமங்கலம் நகராட்சி எல்லையில் இருந்து 4 கிலோ மீட்டருக்கு அப்பால் சுங்கச்சாவடி இருக்க வேண்டிய நிலையில், நகராட்சி எல்லையில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மேலும், திருமங்கலம் நகர், டி.கல்லுப்பட்டி, பேரையூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த உள்ளுர் வாகனங்களுக்கும் சுங்கக் கட்டணம் வசூலிக்கத் தொடங்கியது.
இது தொடர்பாக கப்பலூர் சுங்கச்சாவடி எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை கூட்டத்தில், கப்பலூர் சுங்கச்சாவடி விதிமுறைக்கு புறம்பாக உள்ளதை கண்டித்தும், உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கு கட்டணம் வசூலிப்பதை கண்டித்தும் இன்று திருமங்கலம் நகர் பகுதியில் கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டது. மேலும், திருமங்கலத்தில் சுங்கச்சாவடி நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்புக்கு அதிமுக உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்து இருந்தன.
இந்நிலையில், போராட்டக்குழு அறிவித்தபடி இன்று திருமங்கலம் நகர் பகுதியில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. மேலும், காய்கறி சந்தை, ஆட்டு சந்தை உள்ளிட்டவையும் செயல்படவில்லை. இதனால் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும், திருமங்கலம் ராஜாஜி சிலை முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் சுங்கச்சாவடி எதிர்ப்பு ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது, விதிமுறைக்கு புறம்பாக அமைக்கப்பட்ட கப்பலூர் சுங்கச்சாவடிவை அகற்றக் கோரியும், திருமங்கலம் நகர், டி.கல்லுப்பட்டி, பேரையூர் உள்ளிட்ட உள்ளூர் வாகனங்களுக்கு நிரந்தமாக கட்டண விலக்கு வழங்கக்கோரியும் முழக்கங்களை எழுப்பினர். திருமங்கலத்தில் கடையடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டத்தை ஓட்டி 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.