ஆம் ஆத்மி கட்சியின் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் பண மோசடி வழக்கில், கடந்த மே மாதம் அமலாக்கப்பிரிவால் கைதுசெய்யப்பட்டார். அவர் தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இதற்கிடையே சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இவருக்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுவருவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதைத் தொடர்ந்து, திகார் சிறை அதிகாரி அஜித்குமார், அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு அதிகப்படியான சலுகைகள் வழங்குவதாகக் கூறி பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், பா.ஜ.க தலைவர்கள் சமூக வலைதளத்தில், அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு சிறையில் மசாஜ் செய்வது தொடர்பான வீடியோ ஒன்றை வெளியிட்டனர். மேலும் இதுகுறித்து பா.ஜ.க பல்வேறு கேள்விகளை முன்வைத்து வருகிறது. ஆனால், மருத்துவர்களின் அறிவுரைப்படி இவர் பிஸியோதெரபி சிகிச்சை எடுத்துவருவதாக ஆம் ஆத்மி கட்சி சார்பில் பதிலளிக்கப்பட்டது.
இது தொடர்பாக பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் கவுரவ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ஆம் ஆத்மி கட்சியில் ஊழல் மலிந்திருக்கிறது. ஊழலுக்கு எதிராகவும், விஐபி கலாசாரத்தை ஒழிக்கவும் கட்சியை ஆரம்பித்தீர்கள். ஆனால் ஊழல் கறை படிந்த ஒருவருக்குச் சிறையில் அனைத்து வசதிகளும் கிடைக்கின்றன” என்று தெரிவித்தார்.
இந்தநிலையில், திகார் சிறையில் சத்யேந்தர் ஜெயினுக்கு மசாஜ் செய்தவர் குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இது தொடர்பாகப் பதிலளித்த சிறை அதிகாரிகள், “சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் டெல்லி சத்யேந்தர் ஜெயினுக்கு மசாஜ் செய்தவர், போக்சோ சட்டம் 6 & IPC 376, 506 & 509 ஆகியவற்றின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட கைதி ரிங்கு. அவர் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவர். அவர் பிசியோதெரபிஸ்ட் இல்லை” எனத் தகவல் தெரிவித்திருக்கின்றனர்.