ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலம் முடிவடைந்த பிறகு இந்த ‘மெட்ராஸ் ஐ’ பாதிப்பு ஏற்படும், ஆனால் இந்த ஆண்டு நீடித்த மழைப்பொழிவு காரணமாக இதன் தாக்கம் அதிகரித்து இருக்கிறது. 20% க்கும் அதிகமானோர் ‘மெட்ராஸ் ஐ’ எனப்படும் கான்ஜுன்க்டிவிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு வேகமாகப் பரவிவிடும், பெரும்பாலும் இது பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்று காரணமாக ஏற்படுகிறது. கண்ணில் சுரக்கும் ஒருவகையான திரவத்தின் மூலம் இது பரவுகிறது,
பாதிக்கப்பட்ட்டவருக்கு கண்களில் எரிச்சல், நீர் வடிதல், கண்கள் சிவத்தல், அழுக்குகள் வெளியேற்றம் மற்றும் அதிக உணர்திறன் கொண்ட கண்கள் ஆகியவை ஏற்படும். கான்ஜுன்க்டிவிடிஸ் பொதுவாக ஒரு சிறிய கண் தொற்று என்றாலும் இதற்கு சரியான முறையில் மருத்துவரிடம் சிகிச்சை பெறவேண்டியது அவசியம். மருந்தகங்களுக்கு சென்று நீங்களே சுயமாக மருந்துகளை வாங்கி உபயோகிக்கக்கூடாது.
ஒருவரது துண்டுகள், தலையணை கவர்கள் மற்றும் மேக்கப் பொருட்கள் போன்ற தனிப்பட்ட உடைமைகளை பயன்படுத்துவதால் இந்நோய் மற்றொருவருக்கு எளிதில் பரவும். நோயாளிகள் தங்கள் கண்களில் இருந்து வெளியேறும் கழிவுகளை துடைக்க காகித நாப்கின்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் மற்றும் பயன்படுத்திய நாப்கின்களை உடனடியாக அகற்ற வேண்டும். மீண்டும் மீண்டும் ஒரே கைக்குட்டைகளைப் பயன்படுத்தக்கூடாது, அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் மற்றும் தொற்றுநோயைத் தடுக்க மற்றவர்களின் தனிப்பட்ட பொருட்களை பயன்படுத்தக்கூடாது. நோய் பாதித்தவர்கள் சரியாகும் வரை பள்ளிகள், அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களுக்கு செல்லக்கூடாது.